
சமீபத்திய ஆய்வின்படி, ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஹூவாய் முதன்முறையாக மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் ஏற்றுமதியில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது.
2020ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் ஹூவாய் நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சாம்சங், ஆப்பிள் மற்றும் பிற அனைத்து ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களை விட ஹவாய் 55.8 மில்லியன் மின்சாதனங்களை இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஏற்றுமதி செய்துள்ளது.
கேனலிஸின் ஆய்வின்படி, சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களைத் தவிர்த்து வேறு ஒரு நிறுவனம் 9 ஆண்டுகளில் முதல் இடத்தை அடைந்தது இதுவே முதல் முறையாகும்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பிற நிறுவனங்களில் ஏற்பட்ட ஏற்றுமதி வீழ்ச்சி ஹவாய் நிறுவனம் முன்னணி பெற்றதற்கு காரணம் எனத் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஹவாய் 55.8 மில்லியன் ஸ்மார்ட்போன்களை உலகளவில் ஏற்றுமதி செய்தது. இது கடந்த ஆண்டை விட 5 சதவீதம் சரிவு. ஆனால், சாம்சங் 53.7 மில்லியன் ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது 2019 ஆம் ஆண்டின் 2 ஆம் காலாண்டை ஒப்பிடும்போது 30 சதவிகித சரிவு ஆகும்.
குறிப்பாக அமெரிக்க அரசாங்க கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, ஹவாய் நிறுவனத்தின் முக்கிய சந்தையாக சீனா உள்ளது. உலகளாவிய ஸ்மார்ட்போன் விற்பனையில் 27 சதவிகிதம் சரிந்த பின்னரும் ஹவாய் முதலிடத்தைப் பெற முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.