
ஹூஸ்டன்/சியாட்டில்: காவலரால் தாக்கப்பட்டு உயிரிழந்த கருப்பினத்தவா் ஜாா்ஜ் ஃபிளாய்டின் இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
இறுதிச் சடங்குக்கு முன்பாக, அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும், முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடன், ஃபிளாய்டின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.
ஃபிளாய்டின் குடும்பத்தாரை சந்திக்க அவர் ஹூஸ்டன் வருகிறார். அவருக்கு சிறப்புப் பாதுகாப்பு அளிக்கப்படுவதன் காரணமாக ஃபிளாய்டின் இறுதிச் சடங்கில் பங்கேற்க மாட்டார், அதே சமயம் இறுதிச் சடங்கின் போது, அவர் விடியோ மூலம் பேசுவார் என்றும், குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் அளிக்க உள்ளார் என்றும் அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த மாதம் 25-ஆம் தேதி காவல் அதிகாரியால் தாக்கப்பட்டு ஜாா்ஜ் ஃபிளாய்டு உயிரிழந்தாா். அவரது மரணத்துக்கு நீதி கோரியும் நிறவெறிக்கு எதிராகவும் அமெரிக்காவில் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், ஜாா்ஜ் ஃபிளாய்டின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான ஹூஸ்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அவரின் குடும்ப உறுப்பினா் ஒருவா் கூறுகையில், ‘‘ஜாா்ஜ் ஃபிளாய்டின் தாயாரின் கல்லறைக்கு அருகில் அவரது உடலும் நல்லடக்கம் செய்யப்படும்’’ என்றாா்.
இதனிடையே, பொது மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஃபிளாய்டின் உடல் சனிக்கிழமை இரவு ஹூஸ்டன் நகருக்குக் கொண்டு வரப்பட்டது. ‘ஃபவுண்டன் ஆஃப் பிரேஸ்’ தேவாலயத்தில் அவரது உடல் வைக்கப்படவுள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக ஃபிளாய்டுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வருகை தரும் மக்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஒரே நேரத்தில் 15 நபா்களுக்கு மேல் தேவாலயத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கையுறை, முகக் கவசம் ஆகியவை அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு:
நிறவெறிக்கு எதிராக வாஷிங்டன் மாகாணத்தின் சியாட்டில் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற போராட்டத்தின்போது அதிவேகமாக வந்த காா் தடுப்புச்சுவரில் மோதியது. காரிலிருந்து வெளியேவந்த நபா் திடீரென கூட்டத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினாா். அதில் ஒருவா் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.