

மாஸ்கோ: ரஷியாவில் புதிதாக 10,581 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.45 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை 1,356 பேர் உயிரிழந்தனர்.
ரஷியாவில் கடந்த சில நாள்களாக கரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அங்குள்ள மருத்துவமனைகளுக்கு நோய்த் தொற்று பாதிப்புடன் தினமும் ஏராளமான மக்கள் வருவது மருத்துவர்களையும், அதிகாரிகளையும் கவலை அடையச் செய்திருக்கிறது.
இந்த நிலையில், கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் அரசு பணிக்குழு அறிக்கையின் அடிப்படையில், ரஷியாவில் புதிதாக 10,581 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் தலைநகர் மாஸ்கோவில் மட்டும் 5,795 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ரஷியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,45,268 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,356 பேர் இந்த நோய்த் தொற்றுக்கு பலியாகினர்.
"கரோனா பரிசோதனை அண்மையில் விரிவுபடுத்தப்பட்டதே, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீர் உயர்வுக்குக் காரணம். நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கும் சிச்சையளிக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மருத்துவமனைகள் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன' என அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாஸ்கோ மேயர் செர்கேய் சோபியானின் திங்கள்கிழமை கூறியது: மாஸ்கோவில் உள்ள மொத்த மக்கள்தொகையில் 2 சதவீதம் பேர் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அதாவது 2.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்க திடீர் உயர்வு காரணமாக, பல்வேறு கண்காட்சியகங்களும் 10 ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் உயிர் காக்கும் வசதிகளுடன் 1.20 லட்சம் மருத்துவப் படுக்கைகளை தயார் நிலையில் வைக்க அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.