

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஓசையின்றி நடந்த ராணுவப் புரட்சியால் ஆட்சியிலிருந்து அதிபர் அகற்றப்பட்ட நிலையில், மீண்டும் அதிகாரத்தை மக்கள் கையில் ஒப்படைக்கும் முயற்சிகள் தொடங்கியிருப்பது ஒரு நல்ல சமிக்ஞையை கொடுத்திருக்கிறது.
ராணுவம் ஏற்படுத்திய இந்த ஆட்சி மாற்றத்தை ராணுவப் புரட்சி என்கிற வகைக்குள் அடக்கிவிட முடியாது. ஏனெனில், உலகெங்கிலும் இதுவரை நடந்த ராணுவப் புரட்சிகளுக்கான இலக்கணங்களை மாலி புரட்டிப் போட்டுள்ளது. உதாரணமாக, ராணுவப் புரட்சி என்றால் நாட்டின் துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய கேந்திரங்கள், தகவல் தொடர்பு முதலியவற்றை முதலில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் ராணுவம் கொண்டுவரும். ஆனால், மாலியில் இவை எதுவும் நடைபெறவில்லை.
கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி தலைநகர் பமாகோவுக்கு அருகில் உள்ள நகரம் ஒன்றில் அமைந்துள்ள ராணுவத் தளத்தில் கலகத்தில் ஈடுபட்ட ராணுவத்தின் ஒரு பகுதியினர், வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு ஏராளமான வாகனங்களில் தலைநகர் நோக்கிச் சென்றனர். நேராக அதிபர் இல்லத்துக்குள் நுழைந்த ராணுவத்தினர், அதிபர் இப்ராகிம் புபக்கர் கெய்ட்டா, பிரதமர் சிúஸ மற்றும் முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகளை கைது செய்ததாக அறிவித்தனர். அடுத்த நாளே அதிபர் நாடாளுமன்றத்தைக் கலைத்ததாக அறிவித்து, தனது பதவியையும் ராஜிநாமா செய்தார். அத்துடன் ஆட்சி அதிகாரம் தற்காலிகமாக ராணுவத்தின் கைக்கு வந்தது.
ராணுவப் புரட்சிக்கு தலைமை வகித்த கர்னல் அசிமி கொய்ட்டா.
பிரச்னை ஆரம்பம் இந்த ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு ராணுவத்தை மட்டுமே காரணமாகச் சொல்ல முடியாது. அதற்குப் பின்னணியில் மக்கள் இயக்கத்தின் தீவிர போராட்டம் உள்ளது. அதிபர் கெய்ட்டா 2018-ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொடங்கிவிட்டது பிரச்னை.
அதிபர் தேர்தலில் முறைகேடு செய்து அவர் வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அன்றுமுதல் அதிபருக்கு எதிராக போராட்டங்கள் அவ்வப்போது நடைபெற்று வந்த நிலையில், நிகழாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது; அதிலும் பல முறைகேடுகளைச் செய்து அதிபரின் கட்சி வெற்றி பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகள் இணைந்து புதிய எதிர்க்கட்சிக் கூட்டணியை கடந்த மே 30-இல் தொடங்கின. தேர்தலில் முறைகேடு செய்தது, பொருளாதாரச் சீர்குலைவை ஏற்படுத்தி நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டுசென்றது போன்ற காரணங்களுக்காக அதிபர் பதவி விலகக் கோரி, "ஜூன் 5' என்ற ஓர் இயக்கத்தை நடத்தப்போவதாக எதிர்க்கட்சிக் கூட்டணி அறிவித்தது. அதன்படி, ஜூன் 5-ஆம் தேதி தலைநகர் பமாகோவில் வரலாறு காணாத போராட்டம் நடைபெற்றது. அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சாலைகளில் திரண்டு அதிபரின் ராஜிநாமா கோரி குரல் எழுப்பினர்.
இப்ராகிம் புபக்கர் கெய்ட்டா
களமிறங்கிய ராணுவம்
இதையெல்லாம் பொருட்படுத்தாத அதிபர் கெய்ட்டா, பிரதமராக சிúஸவை மீண்டும் நியமித்து புதிய அரசை அமைக்கும் ஏற்பாடுகளில் தீவிரம் காட்டினார். இதைத் தொடர்ந்து, "ஜூன் 5' இயக்கத்தின் கீழ் மீண்டும் போராட்டம் வெடித்தது. அதற்குப் பணிந்து ஜூலை ஆரம்பத்தில் எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்தும் நோக்கில் சில அரசியல் சீர்திருத்தங்களை அதிபர் கொண்டு வந்தாலும், அவற்றை எதிர்க்கட்சிக் கூட்டணி ஏற்க மறுத்துவிட்டது.
மாலியில் நிலைமை கைமீறிச் செல்வதைப் பார்த்து, 15 நாடுகள் கொண்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பு மத்தியஸ்த நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்தது. நைஜீரிய முன்னாள் அதிபர் ஜொனாதன் குட்லக் தலைமையிலான அந்தக் குழு எதிர்க்கட்சிக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
ஆனால், அதுவும் தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலையில்தான் ராணுவம் களமிறங்கி, அதிபர், பிரதமர் உள்ளிட்டோரை கைது செய்து ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டது.
அதிபர் கெய்ட்டா ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டுவிட்டதாலேயே மாலியின் பிரச்னைகள் அனைத்தும் முடிந்துவிடுமா என்றால் இல்லை. ஏனெனில், மாலியை தனது காலனி ஆதிக்கத்தில் முன்பு வைத்திருந்த பிரான்ஸூம், ஆப்பிரிக்க ஒன்றியம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாடுகளும் இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்கவில்லை. ஆட்சி அதிகாரத்தை மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என ராணுவத் தலைமைக்கு எச்சரிக்கை விடுத்தன.
மீண்டும் மக்களாட்சியை நோக்கி...
அதிபரை ஆட்சியிலிருந்து அகற்றியபோதே, ஆட்சி செய்வதில் ராணுவத்துக்கு நாட்டமில்லை எனவும் மீண்டும் தேர்தல் நடத்துவது, அதுவரை மக்கள் பிரதிநிதிகளிடம்  ஆட்சியை ஒப்படைப்பதே நோக்கம் என்றும் ராணுவம் அமைத்துள்ள தேசிய நிர்வாக ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கர்னல் அசிமி கொய்ட்டா தெளிவுபடுத்தியிருந்தார். 
புரட்சி நடத்தி ஆட்சியைக் கைப்பற்றியவர்கள் இதுபோன்ற வாக்குறுதிகளை மீறிய வரலாறு பல நாடுகளில் உண்டு. ஆதலால், ராணுவத்தை சந்தேகக் கண் கொண்டு சர்வதேச சமூகம் பார்ப்பதில் தவறில்லை.
இச்சூழ்நிலையில், அதிகாரத்தை மீண்டும் மக்களாட்சி வசம் ஒப்படைப்பதற்கான பேச்சுவார்த்தையை ராணுவ பிரதிநிதிகள் தொடங்கியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர்கள், மத அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது, அதுவரை அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் குழுவிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
புதிய மாலியை உருவாக்கி மக்களாட்சி வசம் ஒப்படைப்போம் என ராணுவம் தெரிவித்துள்ளது. ராணுவம் உள்பட அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடும் நிலையில் ராணுவம் குறிப்பிடும் புதிய மாலி எப்படி அமையப் போகிறது என்பதற்கான விடை தெரியவில்லை. அதிபரை ஆட்சியிலிருந்து அகற்ற நடந்த புரட்சி, ராணுவத்துக்கு எதிராகவும் நடந்துவிடக் கூடாது என்றால் சுமுகமான, விரைவான ஆட்சி மாற்றம் அவசியம்.
4-ஆவது புரட்சி...
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி, ஆப்பிரிக்காவின் 8-ஆவது பெரிய நாடு. பிரான்ஸின் காலனி ஆதிக்கத்திலிருந்து 1960-இல் விடுதலை பெற்ற பிறகு இதுவரை அங்கு புரட்சி மூலம் நான்கு முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 
1968-இல் நடந்த முதல் ராணுவப் புரட்சி அமைதியாக நடைபெற்றது. மேஜர் ஜெனரல் மூசா டிரவோரே தலைமையிலான ராணுவம், அதிபர் மொடிபோ கெய்ட்டாவை ஆட்சியிலிருந்து அகற்றியது. அதன் பிறகு மூசா அதிபரானார்.
மூசாவின் சர்வாதிகார ஆட்சி 1991 வரை தொடர்ந்தது. அவரது ஆட்சியும் புரட்சி மூலமே தூக்கியெறியப்பட்டது. அப்போதைய கலகங்களில் பலர் பலியாகினர். ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட மூசாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கினார் அடுத்த அதிபர் கொனாரே.
2012-இல் நடைபெற்ற ராணுவப் புரட்சியில் அதிபர் டூரே பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
தற்போதைய, 4-ஆவது புரட்சியில் அதிபர் இப்ராகிம் கெய்ட்டாவின் ஆட்சி வீழ்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.