ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக கரோனா தடுப்பூசி சோதனை நிறுத்திவைப்பு: பக்க விளைவை ஏற்படுத்தியதால் திடீர் முடிவு

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முன்னிலை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி, 3-ஆவது கட்ட சோதனையின்போது பக்கவிளைவை ஏற்படுத்தியதால்,  அந்த
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக கரோனா தடுப்பூசி சோதனை நிறுத்திவைப்பு: பக்க விளைவை ஏற்படுத்தியதால் திடீர் முடிவு

லண்டன்: கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முன்னிலை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி, 3-ஆவது கட்ட சோதனையின்போது பக்கவிளைவை ஏற்படுத்தியதால், அந்த மருந்தின் சோதனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து அந்தத் தடுப்பூசியை உருவாக்கியுள்ள ஆஸ்ட்ராùஸனெகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முக்கியமான 3-வது கட்டப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு வந்த எங்களது கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பிரிட்டனைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவருக்கு எதிர்பாராத உடல்நலக் குறைவு ஏற்பட்டது. தடுப்பூசி செலுத்தப்பட்டன் பக்கவிளைவாக அந்த உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.
இதையடுத்து, அந்தத் தடுப்பூசியின் 3-ஆவது கட்ட சோதனை நிறுத்திவைக்கப்படுகிறது. தடுப்பூசி சோதனைகளின்போது பல்வேறு காரணங்களால் அந்த சோதனைகள் அவ்வப்போது நிறுத்திவைக்கப்படுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாகவே எங்களது கரோனா தடுப்பூசி சோதனையும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து "நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்டுள்ள செய்தியில், ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராùஸனெகா கரோனா தடுப்பூசி சோதனை முறையில் செலுத்தப்பட்ட ஒருவருக்கு குறுக்குவெட்டு அழற்சி என்ற நோய் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீநுண்மி தாக்குதலால் ஏற்படக்கூடிய அந்த நோய், முதுகு தண்டுவடத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனினும், அவருக்கு அந்த நோய் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை. இதுதொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அப்போதுதான், கரோனா தடுப்பூசியால்தான் அவருக்கு அந்த நோய் ஏற்பட்டதா என்பது குறித்து தெரிய வரும் என்று அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக உலகம் முழுவதும் தயாரிக்கப்பட்டு வரும் தடுப்பூசிகளில், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசிதான் அதிக நம்பிக்கையை ஏற்படுத்தி வந்தது. முதல் இரு கட்டங்களை அது வெற்றிகரமாகக் கடந்த நிலையில் அந்த நம்பிக்கை மேலும் அதிகரித்தது.
பக்கவிளைவு காரணமாக அந்தத் தடுப்பூசி சோதனை நிறுத்தைவைக்கப்படுவது கவலையை ஏற்படுத்துவதாக சில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், தடுப்பூசிகளின் மூன்றாவது கட்டப் பரிசோதனையில் மிக அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு அந்த மருந்து செலுத்தி சோதிக்கப்படும்போது, அவர்களில் யாருக்காவது உடல்நலக் குறைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. உடல்நலக்குறைவுக்கான காரணம் குறித்து கவனமாக ஆராய்ந்த பிறகே இதுகுறித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று அந்தப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அவை பல்வேறு கட்டங்களாக மனிதர்களின் உடலில் செலுத்தி சோதித்துப் பார்க்கப்பட்டு வருகின்றன.
எனினும், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன் கரோனா தடுப்பூசியின் பரவலான பயன்பாட்டை எதிர்பார்க்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் கடந்த வெள்ளிக்கிழமை கூறினார்.
உலகின் பல பகுதிகளில் கரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டு வந்தாலும், அவற்றில் எந்தவொரு தடுப்பூசியும் இதுவரை தனது 3-ஆவது கட்ட பரிசோதனை நிலையில் திருப்திகரமான செயல்திறனை இதுவரை வெளிப்படுத்தவில்லை.
கரோனா நோய்த்தொற்றைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் அந்த தடுப்பூசிகளுக்கு இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்காக உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள அளவீடுகளை அவை 50 சதவீதம் கூட எட்டவில்லை.
எனவே, கரோனா தடுப்பூசி பரவலாக பயன்படுத்தப்படுவதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்று அவர் கூறினார். எனினும், உலகிலேயே முதல் முறையாக கரோனாவுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்துவிட்டதாக ரஷியாவின் செஷெனோவ் பல்கலைக்கழகம் கடந்த ஜூலை மாதமே அறிவித்தது.
தடுப்பு மருந்து சோதனைகளுக்கான உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களை ரஷியா முழுமையாகப் பின்பற்றவில்லை என்று கூறிய சர்வதேச மருத்துவ நிபுணர்கள், அந்த நாட்டின் கரோனா தடுப்பூசி மனிதர்களுக்கு பாதுகாப்பானது என்றோ, கரோனாவிலிருந்து அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் என்றோ உடனடியாக முடிவுக்கு வர முடியாது என்று எச்சரித்திருந்தனர்.
எனினும், தாங்கள் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசியை பொதுமக்களின் பரவலான பயன்பாட்டுக்காகத் தயாரிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் கடந்த கடந்த மாதம் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தங்களது கரோனா தடுப்பூசிகளின் முதல் தொகுதிகளை ரஷியா வெளியிட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை தகவல் வெளியானது.
இந்தச் சூழலில், மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கரோனா தடுப்பூசி சோதனை, பக்கவிளைவு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com