அச்சம் வேண்டாம், இது அமெரிக்காவில் நடந்த ஆய்வின் முடிவுதான்

கரோனா பாதித்து குணமடைந்தவர்களில் சிலருக்கு மாதங்கள் கடந்த நிலையில் இதய பாதிப்பு ஏற்பட்டதும், கரோனா தீவிரமடையாதவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அச்சம் வேண்டாம், இது அமெரிக்காவில் நடந்த ஆய்வின் முடிவு
அச்சம் வேண்டாம், இது அமெரிக்காவில் நடந்த ஆய்வின் முடிவு


வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கரோனா பாதித்து குணமடைந்தவர்களில் சிலருக்கு மாதங்கள் கடந்த நிலையில் இதய பாதிப்பு ஏற்பட்டதும், கரோனா தீவிரமடையாதவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதித்து அதில் இருந்து மீண்டவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் தி வால் ஸ்டிரீட் மருத்துவ இதழில் இந்த ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கரோனாவில் இருந்து மீண்டவர்களில் சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, இதய கோளாறுகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் பிறக்கும்போது இருந்த இதயத்தின் தசை செல்களுடன்தான் நாம் பெரும்பாலும் இறக்கிறோம், எனவே, இதய தசைகளில் உள்ள செல்கள் இறக்க நேரிடும் வகையில் ஏதேனும் நடந்தால், அது மீளமுடியாத, இதயத்தின் ஒட்டுமொத்த செயல்பாடு மற்றும் செயல்திறன் ஆகியவற்றை பாதிக்கும் என்று வாஷிங்டனில் உள்ள இதய மருத்துவத் துறை இயக்குநர் சார்லெஸ் முர்ரே தெரிவித்துள்ளதாக கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பருவக் கால காய்ச்சல் மற்றும் இதர தொற்றுநோய்களுக்குப் பிறகுக் கூட சில நோயாளிகளுக்கு நெஞ்செரிச்சல், இதயத் துடிப்பில் சீரற்றத் தன்மை, ஏன் இதய செயலிழப்பு போன்றவையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கரோனா பாதித்து பலியானவர்களுக்கு நடத்தப்பட்ட உடற்கூராய்வில், இதய நாளங்களில் அதிகளவில் கரோனா வைரஸ் பரவியிருந்ததும், அதே சமயம் கரோனாவில் இருந்து மீண்டவர்களின் இதயத்தை பரிசோதித்த போதும் கிடைத்த தகவல்களும் இந்த ஆய்வுக்கு ஆதாரமாக அமைந்துள்ளன.

அதேவேளை, இந்த ஆய்வு தற்போது ஆரம்ப நிலையிலேயே இருப்பதாகவும், மேலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு நோயாளிகளிடமும் ஆய்வுகளை செய்துதான் ஆராய்ச்சியாளர்கள் ஒரு முடிவுக்கு வர முடியும்.

நோயாளிகளை கரோனா தொற்று இரண்டு வகைகளில் தீவிரமாக பாதிக்கிறது. ஒன்று, நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியில் கரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பின் ஒருங்கிணைந்த விளைவே இதய பாதிப்பாக இருக்கலாம்.

இரண்டாவது, கரோனா வைரஸ், இதய திசுக்களை பாதித்து, இதய செல்களுக்குள் நுழைந்து தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதே.

இது அமெரிக்காவில் கரோனா பாதித்தவர்களுக்கு ஏற்பட்ட பின்விளைவுகளை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட ஆய்வு. எனவே, இதனை இந்தியாவில் அப்படியே பொருத்திப் பார்க்க வேண்டாம். எச்சரிக்கையுடன் இருக்கலாம். கரோனா வராமல் தடுக்கலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com