கரோனாவின் கோரப்பிடியில் ஈகுவேடார்: சாலைகளில் வீசப்படும் உடல்கள்

கரோனா எனும் தொற்றின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் ஏழை நாடுகளில் ஒன்று ஈகுவேடார்
கரோனாவின் கோரப்பிடியில் ஈகுவேடார்: சாலைகளில் வீசப்படும் உடல்கள்



குவிட்டோ: கரோனா எனும் தொற்றின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் ஏழை நாடுகளில் ஒன்று ஈகுவேடார். இங்கு சுமார் 4 ஆயிரம் பேருக்கு கரோனா பாதித்துள்ளது. 220 பேர் கரோனா பாதித்து மரணம் அடைந்துள்ளனர்.

ஈகுவேடாரில் பிப்ரவரி 15ம் தேதி கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட  நிலையில், அங்கு அந்த தொற்றின் அபாயத்தை உணராத மக்கள் அரசின் அறிவுறுத்தல்களை மதிக்காமல் இருந்ததால், இன்று 4 ஆயிரம் பேருக்கு கரோனா பரவியிருக்கிறது. வெறும் நான்கு ஆயிரம் தானே என்று நினைத்தால்  அது தவறு. அங்கு இருக்கும் மருத்துவ வசதிகளைக் கொண்டு பரிசோதனை செய்யப்பட்டவர்கள் மட்டும்தான் 4 ஆயிரம் பேர், மருத்துவமனைக்கு வராமலேயே பாதிக்கப்பட்டிருப்பவர்கள், மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம்.

கடந்த சில நாட்களாக வீட்டிலேயே கரோனா பாதித்து மரணம் அடையும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மருத்துவமனைக்குச் செல்ல முடியாத நிலையில் கரோனா பாதித்து வீட்டிலேயே உயிருக்குப் போராடி வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

உயிரிழந்தவர்களை புதைக்க சவப்பெட்டி கூட கிடைக்காமல் மக்கள் அல்லாடி வருகிறார்கள். உடல்களை சுமந்து சென்று புதைக்க வாகனங்கள் கிடைக்காமல், இறந்த உடலை வீட்டில் வைத்திருப்பதால் தங்களுக்கும் கரோனா பரவும் என்று பயந்து, உயிருக்கு உயிரான உறவுகளின் உடல்களுக்கு இறுதிச் சடங்கு கூட செய்ய முடியாமல், காகிதங்களிலும், பிளாஸ்டிக் பைகளிலும், பெட்ஷீட்களிலும் சுற்றி ஆள் நடமாட்டம் இல்லாத சாலைகளில் கொண்டுச் சென்று வீசிவிட்டுச் செல்கிறார்கள் குடும்பத்தினர்.

இவ்வாறு ஈகுவேடார் முழுக்க சாலையோரங்களில் பிணங்களின் குவியல்களாகக் காணப்படுகின்றன.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள், மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாமல் சிகிச்சைப் பெறாமலேயே மடிந்து போகும் நிலையும் உள்ளது.

தற்காலிகமாக குளிர்பதன வாகனங்களை ஏற்பாடு செய்திருக்கும் ஈகுவேடார் அரசு அதில் சாலையோரம் இருக்கும் உடல்களை போட்டு பதப்படுத்தி வைத்திருக்கிறது.

மருத்துவமனைகளில் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை அரசே குறிப்பிட்ட இடத்தில் புதைத்துவிட்டு குடும்பத்தினருக்கு புதைக்கப்பட்ட இடத்தின் விவரத்தை மட்டும் தெரிவித்து விடும் அளவுக்கு அங்கு நிலைமை மோசமாகியுள்ளது.

பலருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படாத நிலையில், உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டிருப்பதால், அங்கு கரோனா பாதித்தவர்கள் எத்தனை பேர், இறந்தவர்கள் எத்தனை பேர் என்ற அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கப்பெறவில்லை.

கிராமங்களில் இருந்து புறப்பட்டு மருத்துவமனைக்குச் செல்லும் மக்கள் பலரும், அங்கேயே செத்து விழுவதை பார்க்க முடிவதாகவும் பலரும் கூறுகிறார்கள். விடியோக்களும் வெளியாகி உலக நாடுகளுக்கு ஒரு பாடமாக மாறி வருகிறது.

உடல்களை அடக்கம் செய்ய சவப்பெட்டிகளுக்கு பதிலாக அட்டைப் பெட்டிகளை பயன்படுத்தும் நிலையும், குப்பை தொட்டிகளில் உடல்களுடன் சவப்பெட்டிகள் வீசப்பட்டிருப்பதும் கரோனாவின் கோரத் தாண்டவத்தை வெளிப்படுத்துகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com