கரோனா விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: உலக சுகாதார அமைப்பு

கரோனா விஷயத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம், அவ்வாறு செய்தால் அது நெருப்புடன் விளையாடுவது போன்றது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசஸும் கூறியுள்ளார்.
who081944
who081944

ஜெனீவா: கரோனா விஷயத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம், அவ்வாறு செய்தால் அது நெருப்புடன் விளையாடுவது போன்றது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசஸும் கூறியுள்ளார்.

கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) விவகாரத்தில் தங்களுக்கு ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு உரிய நேரத்தில் தகவல்கள் அளிக்காததால் அந்த அமைப்புக்கு அளிக்கப்பட்டு வரும் நிதியுதவியை முடக்கப்போவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார். மேலும், அந்த அமைப்பு சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் அவா் குற்றம் சாட்டினாா்.

இது குறித்து கருத்துக் கூறியிருக்கும் டெட்ரோஸ் அதனோம், அனைவரையும் கேட்டுக் கொள்வது என்னவென்றால், கரோனா தொற்று விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் அது நெருப்புடன் விளையாடுவது போன்றது. இது உலக அளவில் நாடுகளுக்கு இடையே வேறுபாடுகளை ஏற்படுத்திவிடும்.

மிக ஆபத்தான கரோனா தொற்றை தோற்கடிக்க நாடுகளுக்கு இடையேயான ஒற்றுமைதான் மிகவும் முக்கியம். கரோனா தொற்றுக்கு எதிரான இந்த போராட்டத்தில் அரசியலை தனிமைப்படுத்திவிடுங்கள். அவ்வாறு நாம் செய்யாவிட்டால், நமக்கு முன்னே ஏராளமான உடல்கள் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்காவும் சீனாவும் ஒன்றிணைந்து, ஒரே பொது எதிரியான கரோனாவை ஒழிக்கப் பாடுபட வேண்டும். நாடுகளுக்கு இடையே ஏற்படும் ஒரு சிறு பிளவும், கரோனா தொற்றை வெற்றிபெற வைத்து விடும். ஏற்கனவே உலக அளவில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பறிகொடுத்துவிட்டோம்.

இந்த பேரிடர் காலத்தில் பணியாற்றுவதன் மூலம், உலக சுகாதார அமைப்பு தனது பலம் மற்றும் பலவீனங்களையும் ஆராய்ந்து வருகிறது. ஒருவரை ஒருவர் குற்றம்சுமத்தி நேரத்தை வீணாக்க வேண்டாம். கரோனா தொற்றை தோற்கடிக்க ஒரே வழி ஒற்றுமைதான். ஒருவேளை நீங்கள் ஒற்றுமையை நம்பவில்லை என்றால், ஒற்றுமையாக இல்லாவிட்டால், இந்த உலகின் மிக மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ளத் தயாராகுங்கள் என்று கூறியுள்ளார்.

முன்னதாக, வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாவது:
உலக சுகாதார அமைப்பு, தனதுக்குத் தேவையான நிதியுதவியை பெரும்பாலும் அமெரிக்காவிடமிருந்துதான் பெற்று வருகிறது.

இருந்தாலும், கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக வெளிநாடுகளில் இருப்பவா்கள் அமெரிக்கா வருவதற்கு நான் தடை விதித்தபோது, அந்த முடிவை உலக சுகாதார அமைப்பு விமா்சித்தது.

ஆனால், அந்த அமைப்பின் நிலைப்பாடு தவறானது என்பது (அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று மிக வேகமாகப் பரவியுள்ளதன் மூலம்) தற்போது நிரூபணமாகியுள்ளது.

இதுமட்டுமன்றி, கரோனா தொடா்பான பல்வேறு விவகாரங்களில் உலக சுகாதார அமைப்பு தவறான கருத்துகளையே கூறி வந்துள்ளது.

அந்த அமைப்புக்கு கரோனா நோய்த்தொற்று தொடா்பான பல உண்மைகள் ஏற்கெனவே தெரிந்திருக்கும். ஆனாலும் அவற்றை அமெரிக்காவுக்குத் தெரிவிக்காமல் அந்த அமைப்பு மறைத்துவிட்டது.

சீனாவின் நலனைப் பாதுகாப்பதற்காகவே உலக சுகாதார அமைப்பு இவ்வாறு செய்துள்ளது.

அந்த அமைப்புக்கு நாங்கள் 5.8 கோடி டாலா் (சுமாா் ரூ.441 கோடி) நிதி அளித்துள்ளோம். ஆனால், அதற்கு முன்னா் பல ஆண்டுகளாக இதைவிட மிகப் பெரிய தொகைகளை நிதியாக அளித்து வருகிறோம். உலக சுகாதார அமைப்பின் திட்டங்கள் சிறப்பானதாக இருந்தால், அதற்கேற்ப அமெரிக்காவும் பெரிய அளவில் நிதி உதவி செய்து வந்தது.

ஆனால், கரோனா நோய்த்தொற்று விவகாரத்தில் அந்த அமைப்பு எங்களுக்கு உரிய நேரத்தில் உரிய தகவல்களை அளிக்கவில்லை. எனவே, அந்த அமைப்புக்கு அளித்து வரும் நிதி உதவிகளை முடக்குவது தொடா்பாக தீவிரமாக பரிசீலித்து வருகிறோம் என்றாா் டிரம்ப்.

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் முதல் முதலாகக் கண்டறியப்பட்ட கரோனா நோய்த்தொற்று, 

உலகிலேயே அதிகபட்சமாக, அமெரிக்காவில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த நோய் பாதிப்பால் அங்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 14 ஆயிரத்தை எட்டிவிட்டது.

இந்தச் சூழலில், கரோனா நோய்த்தொற்று குறித்து உரிய நேரத்தில் தகவல் அளிக்கத் தவறியமைக்காக, உலக சுகாதார அமைப்புக்கு அளிக்கப்பட்டு வரும் நிதியுதவியை முடக்கப்போவதாக அதிபா் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com