
விஜய் மல்லையா
லண்டன்: இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனுவை இங்கிலாந்து நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன அதிபர் விஜய் மல்லையா ரூ.9,000 கோடி அளவில் வங்கி மோசடி செய்து விட்டு இங்கிலாந்துக்கு தப்பி ஓடினார். அவர் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை வலியுறுத்தி லண்டன் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப கீழ் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் விஜய் மல்லையா ஜாமீன் பெற்றதுடன், நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், திங்களன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த இங்கிலாந்து உயர் நீதிமன்றம், விஜய் மல்லையாவின் மேல் முறையீட்டு மனுவை நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது.