
கோப்புப்படம்
ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் கரோனா வைரஸ் குறித்து பகிரப்பட்ட 70 லட்சம் போலிச் செய்திகளை முகநூல் நிறுவனம் நீக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சமூக தரநிலைகள் அமலாக்க அறிக்கையை ஒட்டி சமீபத்தில் தனது நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு அறிக்கையை முகநூல் நிறுவனம் வெளியிட்டது. அந்த அறிக்கையில் முகநூலில் இருந்து நீக்கப்பட்ட செய்திகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் கரோனா வைரஸ் குறித்து பகிரப்பட்ட 70 லட்சம் போலிச் செய்திகளை நீக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையில், வெறுப்பை ஏற்படுத்தும் வகையிலான 2 கோடியே 25 லட்சம் பதிவுகளை நீக்கியதாக தெரிவிக்கப்பட்டது. இது முதல் காலாண்டில் 95 லட்சமாக இருந்தது.
அதேபோல் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 87 லட்சம் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது. இது கடந்த காலாண்டில் 63 லட்சமாக இருந்தது.
முகநூல் நிறுவனம் அதன் தளங்களில் வெறுக்கத்தக்க உள்ளடக்கத்தின் பரவலில் ஏற்படும் மாற்றங்களை வெளியிடவில்லை.
மேலும் கரோனா பாதிப்பு காரணமாக குறைவான தணிக்கையாளர்களால் தணிக்கை செய்யப்பட்டதால் இவை மறுஆய்வுக்கு உட்படுத்த வாய்ப்புள்ளதாக முகநூல் நிறுவனம் கூறியுள்ளது.