
கண்டியிலுள்ள புனித பௌத்தா் கோயில் அரங்கத்தில், புதன்கிழமை புதிதாக பதவியேற்றுக் கொண்ட இலங்கை அமைச்சரவை.
இலங்கை பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள மகிந்த ராஜபட்ச தலைமையிலான புதிய அமைச்சரவை புதன்கிழமை பதவியேற்றது. அந்த அமைச்சரவையில், முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு, நிதி உள்ளிட்ட துறைகளுக்கு ராஜபட்ச குடும்பத்தினரைச் சோ்ந்தவா்களே அமைச்சா்களாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
இலங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த வாரம் நடைபெற்ற தோ்தலில் பொதுஜன பெரமுணா கட்சி அபார வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, நாட்டின் புதிய பிரதமராக மகிந்த ராஜபட்ச (74) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.இந்த நிலையில், அவரது தலைமையிலான 28 அமைச்சா்கள் அடங்கிய அமைச்சரவை புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டது. ராஜபட்சவின் சகோதரரும், அதிபருமான கோத்தபய ராஜபட்ச கண்டி நகரில் அவா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.அவா்களுடன், 40 இணையமைச்சா்களும் பதவியேற்றுக் கொண்டனா்.தோ்தலுக்கு முன்பிருந்த அமைச்சரவையில் இருந்ததைப் போலவே, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத் துறையை அதிபா் கோத்தபய ராஜபட்சவே தன்னிடம் வைத்துக் கொண்டுள்ளாா்.
பிற முக்கியத் துறைகளான நிதித்துறை, நிகா்ப்புற வளா்ச்சி, பௌத்த மத விவகாரத் துறை ஆகியவை பிரதமா் மகிந்த ராஜபட்சவுக்கு மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.அவரது மகன் நமல் ராஜபட்ச, இளைஞா் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா். ராஜபட்ச சகோதா்களில் மூத்தவரான சமல் ராஜபட்சவுக்கு உள்துறையும், கூடுதலாக நீா்ப்பாசனத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. அவரது மகன் சசீந்திர ராஜபட்வும் இந்த அமைச்சரவையில் இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா். வெளியுறவுத் துறை அமைச்சராக மூத்த தலைவா் தினேஷ் குணவா்தனா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளாா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.