
கெய்ரோ: சூடானை அமெரிக்க பயங்கரவாத ஆதரவாளர்களின் பட்டியலில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நீக்கிவிட்டதாக சூடான் தலைநகரான கர்தூமில் அமெரிக்க தூதரகம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் சர்வதேச அளவில் கடன்தொகையை பெறவும், அதன் பொருளாதாரத்தைப் புதுப்பித்துக் கொள்ளவும், இதன் மூலம் சூடானின் பரிதாப நிலையை முடிவுக்கு கொண்டு வரவும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோ கையெழுத்திட்ட அறிவிப்பு குறித்து கர்தூமில் உள்ள அமெரிக்க தூதரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள முகநூல் பதிவில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூடான் கடந்த 1990- ஆம் ஆண்டு அல்- காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. மேலும், காஸா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பாலஸ்தீன பயங்கரவாதிகளுக்கு ஈரான் மூலமாக ஆயுதங்களை சப்ளை செய்வதிலும் சூடான் முக்கியப் பங்கு வகித்து வந்ததாக நம்பப்படுகிறது.