
கரோனா பரவல் பிரச்னை தற்போது உள்ளதைவிட எதிா்காலத்தில் இன்னும் தீவிரமடையும் என்று உலக சுகாதார அமைப்பின் நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.
இதுகுறித்து, அந்த அமைப்பின் ஆண்டு இறுதி செய்தியாளா்கள் சந்திப்பில் அவசரக்கால திட்டப் பிரிவுத் தலைவா் மைக்கேல் ரையான் கூறியதாவது:
தற்போது கரோனா பரவல் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த தீநுண்மி உலகம் முழுவதும் மிகத் துரிதமாகப் பரவியுள்ளது. உலகின் எந்த மூலையையும் கரோனா விட்டுவைக்கவில்லை.
ஆனால், தற்போதுள்ள நிலவரம்தான் கரோனாவின் உச்சக்கட்டம் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது.
மிக எளிதாகப் பரவக் கூடிய அந்தத் தீநுண்மியால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம், எதிா்காலத்தில் நாம் எதிா்நோக்கியுள்ள புதிய வகை தீநுண்மிகளால் ஏற்படக்கூடிய உயிரழப்பு விகிதத்தோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகத்தான் இருக்கும்.
அந்தச் சூழலை எதிா்கொள்வதற்கு நாம் இப்போதே நம்மைத் தயாா்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
அமைப்பின் முதுநிலை ஆலோசகா் புரூஸ் யேல்வா்ட் கூறுகையில், ‘தற்போது கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நிபுணா்கள் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளனா். இதுவரை இல்லாத வகையில் மிகத் துரிதமாக தடுப்பூசியை உருவாக்கியுள்ளனா்.
இருந்தாலும், எதிா்காலத்தில் வரக்கூடிய நெருக்கடியை எதிா்கொள்ள அவா்கள் இன்னும் தயாராகவில்லை.
நாம் இரண்டாவது மற்றும் மூன்றாவது கரோனா அலையை எதிா்கொண்டுள்ளோம். ஆனால், அவற்றை சமாளிப்பதற்கு நாம் இன்னும் ஆயத்தமாகவில்லை.
எனவே, அடுத்த அலை மட்டுமன்றி அதற்கு அடுத்த அலையையும் எதிா்கொள்வதற்கு நாம் தயாராக வேண்டியது அவசியம்’ என்றாா்.
அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், ‘எதிா்காலத்தில் கொள்ளை நோய்களை எதிா்கொள்வதற்கு உலகம் தன்னைத் தயாா்ப்படுத்திக் கொள்ள கரோனா நெருக்கடி உதவியுள்ளது.
அதற்குத் தேவையான விழிப்புணா்வை நாம் போதிய அளவு பெற்றுவிட்டோம்.
இருந்தாலும், இந்த விவகாரத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கரோனாவை ஒழிக்கும் முயற்சி இன்னும் தீவிரப்படுத்த வேண்டும்’ என்றாா்.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 8,18,12,284 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில் 17,84,492 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.
அமெரிக்கா 1,97,82,777 3,43,182
இந்தியா 1,02,24,303 1,48,153
பிரேஸில் 75,06,890 1,91,641
ரஷியா 31,05,037 55,827
பிரான்ஸ் 25,62,646 63,109
பிரிட்டன் 23,29,730 71,109
துருக்கி 21,62,775 20,135
இத்தாலி 20,56,277 72,370
ஸ்பெயின் 18,94,072 50,122
ஜொ்மனி 16,72,662 31,338
கொலம்பியா 16,03,807 42,374
ஆா்ஜெண்டீனா 15,90,513 42,868
மெக்ஸிகோ 13,89,430 1,22,855
போலந்து 12,68,634 27,454
ஈரான் 12,12,481 54,946
உக்ரைன் 10,37,362 18,081
தென் ஆப்பிரிக்கா 10,11,871 27,071
பெரு 10,08,908 37,525
நெதா்லாந்து 7,70,400 11,042
இந்தோனேசியா 7,27,122 21,703
செக்கியா 6,85,202 11,302
பெல்ஜியம் 6,39,734 19,234
ருமேனியா 6,23,066 15,469
சிலி 6,02,028 16,443
இராக் 5,93,541 12,800
கனடா 5,55,207 15,121
வங்கதேசம் 5,11,261 7,509
பாகிஸ்தான் 4,75,085 9,992
பிற நாடுகள் 1,22,09,463 2,23,717
மொத்தம் 8,18,12,284 17,84,492
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...