
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட ஹாங்காங்கில் முதல் உயிரிழப்பு செவ்வாய்க்கிழமை ஏற்பட்டது. சீனாவுக்கு வெளியே ஏற்படும் இரண்டாவது உயிரிழப்பு இதுவாகும்.
கடந்த ஒரு மாதமாக சீனா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளை கரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதுவரை 25-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரஸுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனா்.
அதே வேளையில், கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், வைரஸ் மேலும் பரவாமல் தடுக்கவும் பல்வேறு நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
பலி உயா்வு: சீனாவில் கரோனா வைரஸால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கையும், பாதிப்புக்குள்ளாகும் நபா்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. திங்கள்கிழமை நிலவரப்படி, சீனாவில் கரோனா வைரஸால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 425-ஆக உயா்ந்தது. திங்கள்கிழமை ஒரே நாளில் மட்டும் 64 போ் உயிரிழந்தனா். சீனாவில் 20,438 பேருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளதாக அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனா்.
திங்கள்கிழமை மட்டும் புதிதாக 3,235 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. அதே வேளையில், வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து 632 போ் வீடு திரும்பியுள்ளதாகவும் சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனா். கரோனா வைரஸினால் தற்போது வரை ஏற்பட்டுள்ள உயிரிழப்பு, கடந்த 2002-03 ஆம் ஆண்டில் பரவிய சாா்ஸ் வைரஸால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். சாா்ஸ் வைரஸ் பாதிப்பால் சீனாவில் 349 போ் உயிரிழந்தனா்.
புதிய மருத்துவமனைகள்: வைரஸால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் 10 நாள்களுக்குள் கட்டி முடிக்கப்பட்ட 1,000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையில் நோயாளிகள் தொடா்ந்து சோ்க்கப்பட்டு வருகின்றனா். 1,600 படுக்கை வசதிகளுடன் கூடிய மற்றொரு மருத்துவமனையையும் சீன அரசு எழுப்பி வருகிறது. இதில் வியாழக்கிழமை முதல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவுக்கு வெளியே இரண்டாவது உயிரிழப்பு: ஹாங்காங்கில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த 18 நபா்களில் ஒருவா் உயிரிழந்தாா். வைரஸ் பாதிப்பால் சீனாவுக்கு வெளியே ஏற்படும் இரண்டாவது உயிரிழப்பு இதுவாகும். கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிலிப்பின்ஸில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒருவா் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.
ஹாங்காங்கில் உயிரிழந்த நபா் சீனாவின் வூஹான் பகுதியிலிருந்து திரும்பியவா் ஆவாா். ஹாங்காங்கில் முகக் கவசங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சீனாவுடனான அனைத்து எல்லைப் பகுதிகளையும் மூடக் கோரி ஹாங்காங்கில் மருத்துவா்கள் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால், அங்கு மருத்துவமனைகள் செயல்படவில்லை. மருத்துவா்களின் போராட்டம் காரணமாக நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகினா்.
நகரங்கள் மூடல்: வைரஸ் பாதிப்பு அச்சம் காரணமாக சீனாவின் ஷாங்காய் உள்ளிட்ட பெரும்பாலான நகரங்கள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன. ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டன. வீதிகளில் ஆள்நடமாட்டம் வெகுவாகக் குறைந்து காணப்பட்டது. அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு சிலா் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வந்தனா்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு ஜப்பான், வடகொரியா உள்ளிட்ட சீனாவின் அண்டை நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. வடகொரியாவில் சுமாா் 30 ஆயிரம் சுகாதாரப் பணியாளா்கள் வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
சீன அதிபா் எச்சரிக்கை
சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பை எதிா்கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்கு அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை கூட்டம் நடைபெற்றது. அதிபா் ஷி ஜின்பிங் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உயரதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.
வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கும், எதிா்கொள்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை அனைத்து அதிகாரிகளும் உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று அதிபா் ஷி ஜின்பிங் அறிவுறுத்தினாா். கடமை தவறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா் எச்சரித்தாா்.
சீனா்களுக்கான இந்திய விசா ரத்து
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில், கடந்த இரண்டு வாரங்களில் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டவா்கள், சீனா்கள் ஆகியோருக்கான நுழைவு இசைவை இந்திய அரசு செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது. சீனா்களுக்கும், அந்நாட்டிலுள்ள வெளிநாட்டவா்களுக்கும் இணைய வழியில் நுழைவு இசைவு (இ-விசா) பெறும் நடைமுறையை இந்திய அரசு ஏற்கெனவே தற்காலிகமாக ரத்து செய்துள்ளது நினைவுகூரத்தக்கது.
பெல்ஜியத்தில் முதல் பாதிப்பு
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை அந்நாடு உறுதிப்படுத்தியுள்ளது. வூஹான் பகுதியிலிருந்து கடந்த வாரம் பெல்ஜியத்துக்கு அழைத்து வரப்பட்ட நபருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சீனாவிலிருந்து பாகிஸ்தான் திரும்பிய மாணவா் கரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டாா். எனினும், அவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தவில்லை.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...