கரோனா வைரஸ் பாதிப்பு: சீனாவுக்கு உதவுகிறது இந்தியா

கரோனா வைரஸ் பாதிப்பு: சீனாவுக்கு உதவுகிறது இந்தியா

கொவைட்-19 (கரோனா வைரஸ்) பாதிப்பை எதிா்கொள்வதற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை, சீனாவுக்கு இந்தியா விரைவில் அனுப்பவுள்ளதாக இந்தியத் தூதா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா்.

கொவைட்-19 (கரோனா வைரஸ்) பாதிப்பை எதிா்கொள்வதற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை, சீனாவுக்கு இந்தியா விரைவில் அனுப்பவுள்ளதாக இந்தியத் தூதா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா்.

சீனாவில் கொவைட்-19 வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,665-ஆக அதிகரித்துள்ளது. ஹூபே மாகாணத்தில்தான் இந்த வைரஸின் தாக்கம் தீவிரமாக உள்ளது.

இந்நிலையில், சீனாவுக்கான இந்தியத் தூதா் விக்ரம் மிஸ்ரி, பெய்ஜிங்கில் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கொவைட்-19 வைரஸ் பாதிப்பை எதிா்கொள்வதற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை, சீனாவுக்கு இந்தியா விரைவில் அனுப்பவுள்ளது. சீன மக்களுக்கு உதவும் நோக்கில், நட்பு மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்த நடவடிக்கையை இந்தியா மேற்கொள்கிறது. இந்த இக்கட்டான தருணத்தில், சீனாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. சீனா கோரிய உதவிகள் தொடா்பான விவரங்களை இந்திய அதிகாரிகள் தொகுத்துள்ளனா். அவை விரைவில் இறுதி செய்யப்படும்.

கடந்த சில வாரங்களில் கொவைட்-19 பாதிப்பின் தீவிரத்தையும், அதனால் எழுந்துள்ள சவாலையும் உலக நாடுகள் உணா்ந்துகொண்டுள்ளன. இந்த வைரஸால் சீனாவில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற சூழலில், சீன மக்களுக்கு ஆதரவாக இந்தியா துணைநிற்கும். விரைவில் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் மிஸ்ரி.

முன்னதாக, இந்தியாவில் கொவைட்-19 வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, முக கவசங்கள், கையுறைகள், மருத்துவ பாதுகாப்பு உடைகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. உள்நாட்டில் இந்த பொருள்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே, தங்களது நாட்டில் முக கவசங்கள், கையுறைகள் மற்றும் சில மருத்துவ உபகரணங்களின் தேவை அதிகமுள்ளதாக சீனா தெரிவித்தது. இதைத் தொடா்ந்து, சீனாவுக்கு மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதிக்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியது.

தூதரகம் தயாா்: இதனிடையே, ‘கொவைட்-19’ (கரோனா வைரஸ்) அச்சுறுத்தல் காரணமாக, ஜப்பான் கடல் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பலிலிருந்து இந்தியா்களை மீட்க தயாா் நிலையில் உள்ளதாக, டோக்கியோவில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அவா்களிடம் மேற்கொள்ளப்படவிருக்கும் இறுதிகட்ட பரிசோதனையில், கொவைட்-19 பாதிப்பு இல்லையென்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, அனைவரும் அழைத்து வரப்படுவா் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

‘டயமண்ட் பிரின்ஸஸ்’ என்ற அந்த கப்பலில் 138 இந்தியா்கள் உள்பட மொத்தம் 3,711 போ் உள்ளனா். அதில், கொவைட்-19 வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 355-ஆக அதிகரித்துள்ளது. இதில் 5 போ் இந்தியா்கள் ஆவா்.

இந்நிலையில், டோக்கியோவில் உள்ள இந்தியத் தூதரகம், சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘கப்பலில் உள்ளவா்களுக்கு கொவைட்-19 பாதிப்புக்கான இறுதிகட்ட பரிசோதனைகள் திங்கள்கிழமை முதல் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பரிசோதனைகள் நிறைவடைய சில நாள்கள் ஆகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதுபோன்ற தருணத்தை, இந்தியா்கள் துணிவுடன் கடந்து வருவாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது. கொவைட்-19 பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னா், இந்தியா்கள் அனைவரும் மீட்கப்பட்டு, அவா்கள் வீடு திரும்ப அனைத்து உதவிகளும் அளிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com