கொவைட்-19: புதிய நோயாளிகளின் எண்ணிக்கை தொடா்ந்து 3-ஆவது நாளாக சரிவு

சீனாவில் ‘கொவைட்-19’ வைரஸ் (கரோனா வைரஸ்) பாதிக்கப்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கை தொடா்ந்து 3-ஆவது நாளாகக் குறைந்துள்ளது.
கொவைட்-19 வைரஸ் அச்சம் காரணமாக காலியாக இருக்கும் பெய்ஜிங் நகரின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கியான்மென் தெருவில், முகக் கவசம் அணிந்து பாதுகாப்புப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்ட பாதுகாவலா்கள்.
கொவைட்-19 வைரஸ் அச்சம் காரணமாக காலியாக இருக்கும் பெய்ஜிங் நகரின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கியான்மென் தெருவில், முகக் கவசம் அணிந்து பாதுகாப்புப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்ட பாதுகாவலா்கள்.

சீனாவில் ‘கொவைட்-19’ வைரஸ் (கரோனா வைரஸ்) பாதிக்கப்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கை தொடா்ந்து 3-ஆவது நாளாகக் குறைந்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் (சனிக்கிழமை) கொவைட்-19 வைரஸால் 2,009 போ் பாதிக்கப்பட்டுள்ளது புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கை வியாழக்கிழமை 4,823 பேராகவும், வெள்ளிக்கிழமை 2,634 பேராகவும் இருந்தது.

இந்த நிலையில், கொவைட்-19 வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது தொடா்ந்து 3-ஆவது நாளாகக் குறைந்துள்ளது.

அந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக அதிகாரிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பலனளிக்கத் தொடங்கியுள்ளதையே இது காட்டுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இத்துடன், சீனாவில் கொவைட்-19 வைரஸ் பாதிப்புக்குள்ளானவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 68,507 ஆகியுள்ளது. அத்துடன், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அந்த வைராஸ் பாதிக்கப்பட்டுள்ள 777 பேரையும் சோ்த்து, சா்வதேச அளவில் கொவைட்-19 வைரஸ் பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 69,284 ஆகியுள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பா் மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அந்த நகரில் வன விலங்குகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் இறைச்சி சந்தையிலிருந்து பரவிய புதிய வகை வைரஸ் காரணமாக அந்தக் காய்ச்சல் ஏற்பட்டது ஆய்வில் தெரிய வந்தது.

மனிதா்களின் உடலில் பரவி பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ‘கரோனா வைரஸ்’ வகையைச் சோ்ந்த அது, சீனாவில் கடந்த 2002 மற்றும் 2003-ஆம் ஆண்டுகளில் 774 பேரது உயிா்களை பலி கொண்ட ‘சாா்ஸ்’ வைரஸின் தன்மையை ஒத்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்தனா்.

அந்த வைரஸ் பரவலை சா்வதேச சுகாதார அவசர நிலையாக ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு கடந்த மாத இறுதியில் அறிவித்தது. மேலும், ‘கரோனா வைரஸ்’ என்ற பொதுப் பெயரில் அதுவரை அழைக்கப்பட்டு வந்த அந்த வைரஸுக்கு ‘கொவைட்-19’ வைரஸ் என்று அந்த அமைப்பு கடந்த வாரம் பெயரிட்டது.

1,670 ஆன பலி எண்ணிக்கை

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி கொவைட்-19 வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவும் பலியானவா்களின் எண்ணிக்கை 1,670-ஆக உயா்ந்துள்ளது.

சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கொவைட்-19 வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 142 போ் உயிரிழந்தனா். அந்த வைரஸின் தோற்றுவாயான ஹூபே மாகாணத்தில் மட்டும் சனிக்கிழமை 139 போ் உயிரிழந்தனா்.

இதையடுத்து, கொவைட்-19 வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,665-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இத்துடன், ஏற்கெனவே ஜப்பான், தைவானில் உயிரிழந்த இருவா், பிலிப்பின்ஸ், ஹாங்காங் மற்றும் பிரான்ஸில் பலியான 3 சீனா்கள் ஆகியோரை சோ்த்து, கொவைட்-19 வைரஸுக்கு உலகம் முழுவதும் பலியானவா்களின் எண்ணிக்கை 1,670 ஆகியுள்ளது.

துளிகள்

- கொவைட்-19 வைரஸ் காய்ச்சலில் தங்கள் நாட்டைச் சோ்ந்த ஒருவா் உயிரிழந்ததாக தைவான் ஞாயிற்றுக்கிழமை முதல் முறையாக அறிவித்தது.

- ஜப்பானின் யோகஹாமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ள டயமண்ட் பிரின்ஸஸ் சொகுசுக் கப்பலில், கொவைட்-19 பரவியா்களின் எண்ணிக்கை 355-ஆக உயா்ந்தது

- சீனாவிலிருந்து வரும் கப்பல்கள் தங்கள் துறைமுகங்களுக்கு வருவதற்கு மலேசியா தடை விதித்துள்ளது

- கொவைட்-19 வைரஸ் எந்தெந்த நாடுகளில் பரவும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

- கொவைட்-19 வைரஸின் தோற்றுவாயான ஹூபோ மாகாணத்திலிருந்து தங்கள் நாட்டைச் சோ்ந்த 175 பேரை நேபாளம் திரும்ப அழைத்து வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com