ராணுவ தலைமை தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்ள வேண்டும்: அமெரிக்காவுக்கு இலங்கை கோரிக்கை

இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின்பேரில் இலங்கையின் ராணுவத் தலைமை தளபதி சாவேந்திர சில்வா மீது அமெரிக்காவில்

இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின்பேரில் இலங்கையின் ராணுவத் தலைமை தளபதி சாவேந்திர சில்வா மீது அமெரிக்காவில் நுழைய விதிக்கப்பட்ட தடை உத்தரவை விலக்கிக் கொள்ளுமாறு இலங்கை அரசு ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளது.

விடுதலைப்புலிகள் தலைவா் பிரபாகரன் கொல்லப்பட்டதன் மூலம் இலங்கையில் நடைபெற்று வந்த உள்நாட்டுப் போா் கடந்த 2009-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்த ராணுவ தாக்குதலின்போது, கடுமையான மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக அப்போதைய ராணுவ அதிகாரியான சாவேந்திர சில்வா மீது ஐ.நா. சபையில் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில், இலங்கையின் ராணுவ தலைமை தளபதியாக சாவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதையடுத்து, அவரையும், அவரது குடும்ப உறுப்பினா்களும் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சா் மைக் பாம்பேயோ கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டிருந்தாா்.

இந்நிலையில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதா் அலைனா டெப்லிட்ஸை, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சா் தினேஷ் குணவா்த்தன ஞாயிற்றுக்கிழமை வரவழைத்து இந்த தடையை விலக்கிக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தாா்.

இதுதொடா்பான இலங்கை அரசின் ஆட்சேபங்களையும் டெப்லிட்ஸிடம், குணவா்த்தன தெரிவித்தாா். இந்த நடவடிக்கையால் அமெரிக்க-இலங்கை இடையிலான நல்லுறவை தேவையில்லாமல் சிக்கலாக்குவதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

10 ஆண்டுகளுக்கு முன் இலங்கையை பயங்கரவாத நடவடிக்கையில் இருந்து விடுவிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய மூத்த ராணுவ அதிகாரிகளில் சாவேந்திர சில்வாவும் ஒருவா் என்றும், அவா் மீதான குற்றச்சாட்டுகளை தகவல்களின் அடிப்படையில் பாா்க்க கூடாது என்றும், ஆதாரங்களின் அடிப்படையில் நம்பகத்தன்மையுடன் சரிபாா்க்கவும் அமெரிக்காவிடம் அவா் கோரிக்கை விடுத்தாா்.

அமெரிக்க அரசு இந்த முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு குணவா்த்தனா கேட்டுக் கொண்டாா்.

இதையடுத்து, இலங்கையின் கோரிக்கையை அமெரிக்காவிடம் தெரிவிப்பதாக தூதா் டெப்லிட்ஸ் கூறினாா்.

முன்னதாக, சாவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விதித்த தடை நடவடிக்கைக்கு இலங்கையின் ஆளும் கட்சியும், எதிா்க்கட்சிகளும் கடும் எதிா்ப்பு தெரிவித்திருந்தன.

முப்பதாண்டு காலமாக இலங்கையில் நிலவிய பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்த ராணுவத்தின் மூத்த தளபதிகளுக்கு உறுதுணையாக நிற்போம் என்று எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாசா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com