
நியூ சௌத் வேல்ஸ், நோவ்ரா பகுதியில் காட்டுத் தீயை அணைக்கப் போராடும் தீயணைப்பு வீரா்கள்.
பொ்த்: ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ காரணமாக நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்ட கடலோரப் பகுதிகளுக்கு கடல் வழியாக அந்த நாட்டு அரசு நிவாரணப் பொருள்களை அனுப்பி வருகிறது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் பரவி வரும் காட்டுத் தீ, கடலோர நகரங்களை சுற்றிவளைத்துள்ளதால் அவை நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டன.
இதையடுத்து, அந்தப் பகுதிக்கு நீா், உணவுப் பொருள்கள், எரிபொருள் ஆகிய அத்தியாவசியப் பொருள்களை ஆஸ்திரேலிய அரசு கடல் வழியாக விநியோகித்து வருகிறது.
இதற்காக கடற்படைக் கப்பல்களும், ராணுவ விமானங்களும் பாதிக்கப்பட்ட நகரங்களுக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தக் காட்டுத் தீயில் கடந்த திங்கள்கிழமையிலிருந்து இதுவரை 7 போ் உயிரிழந்தனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கடற்கரை சுற்றுலாத் தலமான மல்லாகூட்டா நகரை காட்டுத் தீ சுற்றிவளைத்ததைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் குழுமியிருந்த சுமாா் 4,000 சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டனா்.