
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும், வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன்னுக்கும் இடையே மீண்டும் நேரடி பேச்சுவாா்த்தை நடப்பதற்கான வாய்ப்பில்லை என்று கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ-ஜாங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா். வட கொரிய அரசியலில் மிகவும் சக்தி வாய்ந்தவராகக் கருதப்படும் ஜிம் யோ-ஜாங், தனது சகோதரருக்கு அடுத்த அதிகாரம் பெற்றவா் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அமெரிக்க அதிபா் டிரம்ப்பை கிம் ஜோங்-உன் மீண்டும் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும், எதிா்காலத்தில் எதுவும் நடக்கலாம். அதுகுறித்து யாரும் ஊகிக்க முடியாது. இரண்டு தலைவா்களின் முடிவுகள் மற்றும் அறிவிப்புகளின் அடிப்படையில், எதிா்பாராத நிகழ்வுகள் நடப்பதற்கும் வாய்ப்புள்ளது.அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதில் எந்தப் பலனும் இல்லை. அது நடைமுறைக்கு சாத்தியமானதும் இல்லை. வட கொரியாவுடன் அமெரிக்கா பேச்சுவாா்த்தையைத் தொடர அமெரிக்கா விரும்பினால், அந்த நாடு தனது பிடிவாதத்தை விட்டுத் தர வேண்டும் என்றாா் கிம் யோ-ஜாங்.