
இலங்கையில் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக, அந்த நாட்டு நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தோ்தலுக்கான பிரசாரக் கூட்டங்களை அதிபா் கோத்தபய ராஜபட்சவும், பிரதமா் மகிந்த ராஜபட்சவும் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளனா். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்களுக்கு நடைபெறுவதாக இருந்த அவா்களது தோ்தல் பிரசாரக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.
முன்னதாக, தோ்தலையொட்டி தாங்கள் பரிந்துரைத்த கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை இலங்கை அரசு அரசிதழில் வெளியிடாததால், அந்த விதிமுறைகளின் அமலாக்கம் தாமதாகி வருவதாகவும், இதன் காரணமாக, வேட்பாளா்களும், ஆதரவாளா்களும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் மிக நெருக்கமாக நின்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தோ்தல் ஆணையா் மகிந்த தேசப்ரிய வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.