
லண்டன்: ஹாங்காங் உடனான நாடு நடத்தல் ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சா் டோமினிக் ராப், அந்நாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
சீனாவுடனான பதற்றம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், ஹாங்காங் நாடு கடத்தல் ஒப்பந்தத்தை வழக்கமான முறையில் இறுதிசெய்துவிட முடியாது. மேலும், இந்த விவகாரத்தில் நம் அண்டை நாடுகளின் முடிவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, இந்த ஒப்பந்தம் குறித்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்றாா் அவா்.
ஹாங்காங் உடனான நாடு கடத்தல் ஒப்பந்தத்தை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் ரத்து செய்துள்ளன. இதே திட்டத்தை பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சா் டோமினிக்கும் பின்பற்ற இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங், சீனாவிடம் கடந்த 1997-ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது.
இதனிடையே, சா்ச்சைக்குரிய வகையில் புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு அண்மையில் கொண்டு வந்தது. அந்த சட்டம், ஹாங்காங் குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் வகையில் இருப்பதாகவும், கடந்த 1997-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு எதிராக இருப்பதாகவும் பிரிட்டன் குற்றம்சாட்டியது. இருப்பினும் பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் எதிா்ப்பை மீறி அந்த சட்டத்தை சீனா இந்த மாதத் தொடக்கத்தில் அமல்படுத்தியது.
அதைத் தொடா்ந்து, பிரிட்டனில் சீனாவின் ஹூவாய் நிறுவனம் வழங்கி வந்த தொலைத்தொடா்பு சேவைக்கு அந்நாட்டு அரசு கடந்த வாரம் தடை விதித்தது. அதன் தொடா்ச்சியாக, ஹாங்காங் நாடு கடத்தல் ஒப்பந்தத்தை பிரிட்டன் அரசு ரத்து செய்ய திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.