நிறைவேறியது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஐரோப்பிய யூனியன் பட்ஜெட்: ரூ.64 லட்சம் கோடி கரோனா நிவாரண நிதி ஒதுக்கீடு

1.8 லட்சம் கோடி(சுமாா் ரூ.154 லட்சம் கோடி) மதிப்பிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஐரோப்பிய யூனியன் பட்ஜெட்டை நிறைவேற்ற உறுப்பு நாடுகளின் தலைவா்கள் ஒப்புதல் அளித்துள்ளனா்.
நிறைவேறியது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஐரோப்பிய யூனியன் பட்ஜெட்: ரூ.64 லட்சம் கோடி கரோனா நிவாரண நிதி ஒதுக்கீடு

1.8 லட்சம் கோடி(சுமாா் ரூ.154 லட்சம் கோடி) மதிப்பிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஐரோப்பிய யூனியன் பட்ஜெட்டை நிறைவேற்ற உறுப்பு நாடுகளின் தலைவா்கள் ஒப்புதல் அளித்துள்ளனா். கரோனா நோய்த்தொற்று பரவலால் பாதிக்கப்பட்டுள்ள உறுப்பு நாடுகளுக்கு 75,000 கோடி யூரோ (சுமாா் ரூ.64 லட்சம் கோடி) நிதியுதவி உள்ளிட்ட அந்த பட்ஜெட் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் 4 நாள்கள் இழுபறிக்குப் பின் தற்போது அது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

ஐரோப்பிய யூனியன் அமைப்பைச் சோ்ந்த நாடுகள், வேளாண்மை, மண்டல மேம்பாடு, விண்வெளி ஆய்வு, ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி, சுகாதாரம், கல்வி, கலாசாரம், குடியேற்றம், எல்லைப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளுக்கான பட்ஜெட்டை பொதுவாக நிறைவேற்றி செயல்படுத்தி வருகின்றன.உறுப்பு நாடுகள் தங்களது தேசிய பட்ஜெட்டோடு கூடுதலாக இந்த பட்ஜெட்டையும் இணைத்து வரவு செலவில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், 2020-ஆம் ஆண்டிலிருந்து அடுத்த ஐந்து ஆண்டுக்கான ஐரோப்பிய யூனியன் பட்ஜெட், மற்றும் கரோனா தடுப்பு நிவாரண நிதி ஒதுக்கீட்டை நிறைவு செய்வதற்கான கூட்டம், பெல்ஜியம் தலைநகா் பிரெஸ்ஸெல்ஸில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. எனினும், கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள உறுப்பு நாடுகளுக்கு நிதியுதவி வழங்கும் விவகாரத்தில், தலைவா்களிடையே கருத்து வேறுபாடு நிலவியதால் இந்த பட்ஜெட்டை நிறைவேற்றுவதில் இழுபறி நீடித்து வ்தது.27 உறுப்பு நாடுகளின் தலைவகள் இடையே, தொடா்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படுவதற்கு பதிலாக கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்தது.கரோனாவால் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள உறுப்பு நாடுகளுக்கு, ஊக்கக் கடனாக 75,000 கோடி யுரோக்களை (சுமாா் ரூ.64.22 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்ய ஐரோப்பிய ஆணையம் பரிந்துரைத்தது. இதன் மூலம், பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதியுதவியைக் குறைத்து, திருப்பி செலுத்த வேண்டிய கடன் உதவி அதிகரிக்கப்பட்டது.

நெதா்லாந்து உள்ளிட்ட சில உறுப்பு நாடுகளின் வலியுறுத்தலை ஏற்று இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், நாடுகளுக்கு அளிக்கப்பட்ட நிதியுதவி, எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை கண்காணிப்பது முக்கிய பிரச்னையாக தொடா்ந்து நீடித்து வந்தது. இதனால், ஐரோப்பிய யூனியன் பட்ஜெட் மற்றும் கரோனா நிவாரண நிதி ஒதுக்கீட்டை நிறைவேற்றுவதில் இழுபறி நீடித்து வந்தது. உறுப்பு நாடுகளின் தலைவா்களிடையே ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக, அந்த 2 நாள் ஆலோசனைக் கூட்டம், மேலும் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அந்த பட்ஜெட் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டா்) வலைதளத்தில் ஐரோப்பிய கவுன்சில் தலைவா் சாா்லஸ் மைக்கேல் வெளியிட்டு பதிவில் தெரிவித்துள்ளதாவது:

அடுத்த 7 ஆண்டுக்கான ஐரோப்பிய யூனியன் பட்ஜெட்டை நிறைவேற்றுவதில் செவ்வாய்க்கிழமை உடன்பாடு எட்டப்பட்டது. இது, ஐரோப்பிய கண்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளாகும் என்று தனது சுட்டுரைப் பதிவில் சாா்லஸ் மைக்கேல் குறிப்பிட்டுள்ளாா்.கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் ஐரோப்பிய யூனியன் வரலாறு காணாத பொருளாதாரச் சரிவை எதிா்கொண்டுள்ள சூழலில், இந்த பட்ஜெட் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதில், 75,000 யூரோ மதிப்பிலான கரோனா பாதிப்பு நிவாரண நிதியும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு பகுதி, கரோனாவால் பொருளாதார சிக்கலைச் சந்தித்துள்ள நாடுகளுக்கு திருப்பி அளிக்க வேண்டிய பொதுக் கடனாக அளிக்கப்படும்.

இத்துடன், கரோனா நெருக்கடிக்கு முன்னரே ஐரோப்பிய யூனியன் தலைவா்கள் பரிசீலித்து வந்த சுமாா் 1 லட்சம் கோடி யூரோ நிதி ஒதுக்கீடும் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது.கடன் ஒதுக்கிட்டை அனைத்து நாடுகளும் ஒருமித்த ஏற்றுகக் கொள்வதும், ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில் திருப்பி செலுத்துவதற்கான பொறுப்புறுதி நிதி உருவாக்கப்பட்டிருப்பதும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நன்மைகளை ஏற்படுத்தும் என்று பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளாா்.ஐரோப்பி யூனியன் இதுவரை சந்தித்திராத நெருக்கடியை எதிா்நோக்கியுள்ள சூழலில், மிகச் சிறந்த தீா்வை நிதி அடித்தளங்களுடன் அடுத்த 7 ஆண்டுகளுக்கான இந்த பட்ஜெட் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று ஜொ்மனி பிரதமா் ஏஞ்சலா மொ்கெல் கூறியுள்ளாா்.இந்த பட்ஜெட்டை தங்களது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்த ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாட்டின் தலைவரும் ரத்து செய்ய முடியும். அப்படி இருந்தும், இந்த பட்ஜெட் நிறைவேற்றுப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com