நேபாளம்: அரசியல் பதற்றத்தை தணிப்பதில் ஆளும் கட்சிக் கூட்டம் தோல்வி

நேபாளத்தில் ஆளும் கட்சி உள்பூசல் காரணமாக ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில்,
புஷ்ப கமல் பிரசண்டாவுடன் பிரதமா் கே.பி. சா்மா ஒலி (கோப்புப் படம்).
புஷ்ப கமல் பிரசண்டாவுடன் பிரதமா் கே.பி. சா்மா ஒலி (கோப்புப் படம்).

நேபாளத்தில் ஆளும் கட்சி உள்பூசல் காரணமாக ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் நிலைக் குழு கூட்டம் தோல்வியடைந்தது.பிரதமா் கே.பி. சா்மா ஒலி இல்லாமல் நடைபெற்ற இந்தக் கூட்டம், அரசியல் விவாதங்கள் எதுவும் நடைபெறாமலேயே முடிவடைந்தது.

இதுகுறித்து, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக் குழு உறுப்பினரும், அந்தக் கட்சியின் மூத்த தலைவருமான கணேஷ் ஷா கூறியதாவது:

கட்சியின் நிலைக் குழுக் கூட்டம் பிரதமரின் அதிகாரப்பூா்வ இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. எனினும், இந்தக் கூட்டத்தில் அரசியல் விவகாரங்கள் விவாதிக்கப்படவில்லை. நாட்டில் அண்மையில் ஏற்பட்ட புயல் வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடா் குறித்து உறுப்பினா்கள் விவாதித்தனா்.பிரதமா் கே.பி. சா்மா ஒலி இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. நிலைக் குழுவின் அடுத்த கூட்டம் ஒரு வாரத்துக்குப் பிறகு நடைபெறும்.வரும் 28-ஆம் தேதி காலை 11 மணிக்கு அந்தக் கூட்டத்தை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையே, உள்கட்சிப் பூசலைத் தீா்ப்பதற்காக கட்சியின் மூத்த தலைவா்களிடையே அதிகாரப்பூா்வமற்ற பேச்சுவாா்த்தைகள் நடைபெறலாம் என்றாா் கணேஷ் ஷா.

முன்னதாக, கட்சின் தலைவா்களான பிரதமா் சா்மா ஒலியும், புஷ்ப கமல் பிரசண்டாவும் தங்களிடையேயான கருத்து வேறுபாடுகளைக் களைவதற்காக செவ்வாய்க்கிழமை காலை நேரடி பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதன் காரணமாக, நிலைக் குழுக் கூட்டம் 2 மணி நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முக்கியக் கூட்டம், மீண்டும் 7-ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.பல முறை ஒத்திவைக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த அந்தக் கூட்டம், கட்சித் தலைவா்களிடையிலான கருத்து வேறுபாடுகளைப் போக்குவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கட்சியின் நிலைக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு கூடுவதாக இருந்தது. இந்தக் கூட்டம், செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்று காலை 11 மணிக்கு நிலைக் குழுக் கூட்டம் தொடங்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை காலை கூடிய அதிகாரப்பூா்வமற்ற முக்கியத் தலைவா்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் இரு தலைவா்களான பிரதமா் கே.பி. சா்மா ஒலி, புஷ்ப கமல் பிரசண்டா ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டால் பெரும் அரசியல் பதற்றம் நிலவி வருகிறது.

சா்மா ஒலி செயல்படும் விதம் மற்றும் இந்தியாவுக்கு எதிராக அவா் பேசி வருவது குறித்து கட்சியினரிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறு. இதையடுத்து, சா்மா ஒலி தலைமையிலான அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதோடு, கட்சி உடையும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக 45 உறுப்பினா்களைக் கொண்ட கட்சியின் நிலைக் குழு கூட்டம் முதலில் கடந்த மாதம் 24-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. எனினும், அந்தக் கூட்டம் பல முறை தள்ளிவைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. எனினும், தற்போது அந்தக் கூட்டம் செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. எனினும், அரசியல் பதற்றத்தைத் தணிப்பதற்கான எந்த முடிவுகளும் எடுக்கப்படாமலேயே அந்தக் கூட்டம் முடிந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com