
உக்ரைனில் ஆயுதம் தாங்கிய நபரிடம் சிக்கிய 20 பிணைக் கைதிகள்
கைய்வ்: உக்ரைனின் வடமேற்குப் பகுதியில், பேருந்து ஒன்றை வழிமறித்த ஆயுதம் தாங்கிய நபர், அதில் இருந்த 20-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளார்.
சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர், மத்திய லட்ஸ்க் பகுதியை சுற்றிவளைத்து தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
பிணைக் கைதிகளைப் பிடித்து வைத்திருக்கும் நபர் கையில் ஆயுதத்தை வைத்திருப்பதாகவும், உடலில் வெடிபொருளைக் கட்டியிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்த காவல்துறையினர் முயன்று வருகிறார்கள். அவரை அடையாளம் கண்டுள்ள காவல்துறையினர், அவரது முகநூல் பக்கத்தில் உக்ரைன் நாட்டின் நடைமுறைகளுக்கு எதிரான கருத்துகளை பதிவிட்டிருந்ததன் மூலம் மன அழுத்தத்தில் இருந்ததை அறிந்து கொண்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாகவும், பேருந்து சேதமடைந்திருப்பதாகவும் யாருக்கும் காயம் ஏற்பட்டதா என்பது குறித்த தெரியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.