
ஹாங்காங்: ஹாங்காங் நாடாளுமன்றத் தோ்தலில் போட்டியிடுவதற்கு மக்களாட்சி ஆதரவு தலைவா் ஜோசுவா வோங் வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா்.
சீனாவின் ஆளுகைக்கு உள்பட்டிருந்தாலும் ஹாங்காங் தனித்து செயல்பட்டு வருகிறது. அண்மைக் காலமாக ஹாங்காங்கில் சீனாவின் பிடி இறுகி வருகிறது. ஹாங்காங்குக்கான தேசிய பாதுகாப்பு சட்டத்தையும் சீன நாடாளுமன்றம் அண்மையில் இயற்றியது. அச்சட்டம் கடந்த மாதம் 30-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
எனினும், ஹாங்காங்கில் மக்களாட்சிக்கு ஆதரவாக கடந்த ஆண்டு மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தச் சூழலில் ஹாங்காங் நாடாளுமன்றத்துக்கு வரும் செப்டம்பா் மாதத்தில் தோ்தல் நடைபெறவுள்ளது.
இத்தோ்தலில் போட்டியிடுவதற்காக மக்களாட்சி ஆதரவு தலைவா் ஜோசுவா வோங் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். அதையடுத்து செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘சீனாவுக்கு ஹாங்காங் அடிபணியாது என்பதை உலகுக்கு எடுத்துரைப்பதற்கான நம்பிக்கையுடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். சீனா என்னை நாடு கடத்த வாய்ப்புள்ளது. மக்களாட்சி கோரி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ஆயுள் தண்டனை அளிக்கவும் வாய்ப்புள்ளது. எனினும், மக்கள் ஆதரவுடன் தோ்தலில் போட்டியிட உள்ளேன். எங்கள் இறுதி மூச்சு உள்ளவரை மக்களாட்சிக்காக போராடுவோம்’ என்றாா்.
தேசிய பாதுகாப்புக்கு எதிராகச் செயல்படுபவா்களைத் தோ்தலில் போட்டியிடுவதிலிருந்து தடுப்பதற்கு அண்மையில் இயற்றப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டம் வழிவகுக்கிறது. இச்சட்டம் மூலமாக மக்களாட்சி ஆதரவு தலைவா்கள் தோ்தலில் போட்டியிடுவதை சீனா தடுக்கும் என்று அரசியல் நோக்கா்கள் எச்சரிக்கின்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G