
மாஸ்கோ: செக் குடியரசு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டு தூதரக அதிகாரிகள் இருவரை ரஷியாவை விட்டு வெளியேற அந்நாடு திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
செக் குடியரசு நாட்டில் ரஷிய தூதரகத்துக்கு எதிரே அமைந்துள்ள பராகுவே சதுக்கத்துக்கு, மறைந்த ரஷிய எதிர்கட்சித் தலைவர் போரிஸ் நெஸ்த்சோவின் பெயர் வைக்கப்பட்டது. மாற்றப்பட்ட இந்த புதிய பெயர் பலகையை பராகுவே மேயர் ஸ்டெனக் ஹிரிப் கடந்த பிப்ரவரியில் திறந்துவைத்தார்.
அதுபோல, நாஸிகளின் ஆக்கிரமிப்பிலிருந்த பராகுவேவை இரண்டாம் உலகப் போரில் மீட்ட ரஷிய படையை நினைவுகூறும் வகையில் செக் நாட்டின் பராகுவே-6 மாவட்டத்தில் வைக்கப்பட்டிருந்த சோவியத் படைத் தளபதி இவான் கொனவின் சிலை கடந்த ஏப்ரலில் அங்கிருந்து அகற்றப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களும் ரஷியாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. செக் குடியரசின் இந்த நடவடிக்கைகளுக்கு ரஷியா கண்டனமும் தெரிவித்தது.
இந்த நிலையில், இந்த இரண்டு சம்பவங்களில் தொடர்புடைய பராகுவே மேயர் ஸ்டெனக் ஹிரிப், பராகுவே-6 மாவட்ட மேயர் ஆன்ட்ரெஜ் கோலார் மற்றும் பராகுவேயின் ரெபோரிஜே மாவட்ட மேயர் பவெல் நவோட்னி ஆகியோரை விஷம் கொடுத்துக் கொல்ல முயற்சி நடப்பதாகவும், அதற்காக ரஷியாவிலிருந்து தூதரக அதிகாரி கடவுச்சீட்டின் மூலம் ஒருவர் அனுப்பப்பட்டிருப்பதை செக் உளவுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது என்று அங்குள்ள பத்திரிகை ஒன்று கடந்த ஏப்ரலில் செய்தி வெளியிட்டது. இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்தச் செய்தியை ரஷியா மறுத்தது. "இது அடிப்படை ஆதாரமற்ற செய்தி என்று ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறினார். அதுபோல, இந்த தவறான தகவலைப் பரப்பிய நபர்களை செக் உளவுப் பிரிவு கண்டறிந்து, அவர்களில் ஒருவரை கைது செய்திருக்கிறது என்று செக் குடியரசு பிரதமர் ஆன்ட்ரெஜ் பாபிஸூம் அப்போதுகூறினார்.
இந்த நிலையில், ரஷிய தூதரக அதிகாரிகள் இருவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்த மாத தொடக்கத்தில் செக் குடியரசு உத்தரவிட்டது. இது ரஷியாவின் கோபத்தை மேலும் அதிகரித்தது.
செக் குடியரசின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டு தூதரக அதிகரிகள் இருவரை ரஷியா இப்போது வெளியேற்றியுள்ளது. இதுதொடர்பாக ரஷியாவிலுள்ள செக் குடியரசு தூதரை நேரில் வரவழைத்த ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம், "செக் தூதரக அதிகாரிகள் இருவரும் வருகிற புதன்கிழமைக்குள் ரஷியாவைவிட்டு வெளியேற வேண்டும்' என்று அவரிடம் அறிவித்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...