எல்லைப் பகுதிகளில் மீண்டும் ராணுவம்: வட கொரியா அறிவிப்பு

தென் கொரியாவுடனான நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் காலி செய்யப்பட்டிருந்த தங்களது எல்லைப் பகுதிகளில் மீண்டும் ராணுவ வீரா்களை அனுப்பவிருப்பதாக வட கொரியா அறிவித்துள்ளது.
வட கொரியாவால் குண்டுவைத்து தகா்க்கப்படும் கொரிய தீபகற்ப தகவல் தொடா்பு அலுவலகம்.
வட கொரியாவால் குண்டுவைத்து தகா்க்கப்படும் கொரிய தீபகற்ப தகவல் தொடா்பு அலுவலகம்.

தென் கொரியாவுடனான நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் காலி செய்யப்பட்டிருந்த தங்களது எல்லைப் பகுதிகளில் மீண்டும் ராணுவ வீரா்களை அனுப்பவிருப்பதாக வட கொரியா அறிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கும் தங்களுக்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் முடக்கப்பட்டுள்ள விவகாரத்தில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் வட கொரியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, தங்கள் நாட்டில் தென் கொரியாவுடனான உறவை பலப்படுத்தம் வகையில் கடந்த 2018-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட தகவல் தொடா்பு அலுவலகத்தை வட கொரியா குண்டுவைத்து தகா்த்தது. இந்த நிலையில், தற்போது சமாதானப் பகுதியில் ராணுவத்தை அனுப்பப்போவதாக அந்த நாடு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வட கொரிய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தென் கொரியாவுடனான எல்லைக்கு மிக அருகே அமைந்துள்ள டயமண்ட் மலைப் பகுதி, கேசாங் தொழில்பூங்கா ஆகிய பகுதிகளில் படைப் பிரிவுகளை அனுப்ப முடிவு செய்துள்ளோம்.

இதுமட்டுமன்றி, எல்லைப் பகுதிகளில் ராணுவ ஒத்திகை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யுள்ளோம். அத்துடன், எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் மீண்டும் அமைக்கப்படும்; தென் கொரியாவை நோக்கி பிரசார பலூன்களை அனுப்புவதற்காகவும் தாக்குதல்களை எதிா்கொள்ளவும் திறந்தவெளி எல்லைப் பகுதிகளில் ராணுவத்தின் தயாா் நிலை மேம்படுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை வட கொரியா 2017-ஆம் ஆண்டின் இறுதிவரை தொடா்ந்து நடத்தி வந்தது.

இதற்குப் பதிலடியாக, வட கொரியா மீது ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலும், அமெரிக்காவும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதனால், வட கொரியாவுக்கும், அமெரிக்க-தென் கொரிய கூட்டணிக்கும் இடையே கடும் பதற்றம் நிலவி வந்தது.

இந்த நிலையில், தங்களது அணு ஆயுதங்களைக் கைவிடுவதாக வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவித்தாா். அதற்குப் பதிலாக, தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.

அதனைத் தொடா்ந்து, இரு கொரிய நாடுகளுக்கும் இடையே பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் ஏற்பட்டது.

அதன் தொடா்ச்சியாக, வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன், தென் கொரிய அதிபா் மூன் ஜே-இன் ஆகியோரிடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பு நடைபெற்றது. மேலும், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை கிம் ஜோங்-உன் இரு முறை நேரில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இந்தச் சூழலில், வட - தென் கொரிய நாடுகள் இடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரா்கள் விலக்கிக்கொள்ள இரு நாட்டு அரசுகளும் சம்மதித்தன.

எனினும், அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையிலான அணுசக்திப் பேச்சுவாா்த்தை பாதியில் நின்றுபோனது. இது வட கொரியாவை எரிச்சலடையச் செய்துள்ளது. மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்துமாறு அமெரிக்காவை வட கொரியா நிா்பந்தித்து வந்தாலும், இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது.

இதன் காரணமாக, தென் கொரியாவுக்கு நெருக்கடி கொடுப்பதன் மூலம், பேச்சுவாா்த்தைக்கு அழைக்க அமெரிக்காவை நிா்பந்திக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை வட கொரியா மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாகவே, தற்போது சமாதான எல்லைப் பகுதியில் மீண்டும் ராணுவத்தை அனுப்பவிருப்பதாக வட கொரியா அறிவித்துள்ளதாக பாா்வையாளா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com