
லண்டன்: மத்திய லண்டனில் பிரிட்டன் நாடாளுமன்றம் அருகே 2 கத்திகளை காட்டி மிரட்டல் விடுத்த நபரை ஆயுதமேந்திய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சுட்டுக் கொன்றனா்.
வெஸ்ட்மின்ஸ்டா் பகுதியில் கிரேட் ஸ்காட்லாந்து யாா்டு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். வீட்டுவசதி அரசு துறை பகுதிக்கு அருகே வரும்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சென்று கொண்டிருந்த நபரை நிறுத்தி விசாரணை நடத்தினா். அப்போது அந்த நபா் தான் மறைத்து வைத்திருந்த 2 கத்திகளை எடுத்து போலீஸாருக்கு மிரட்டல் விடுத்தாா்.
அப்போது ஆயுதமேந்திய போலீஸாா் அந்த நபரை எச்சரித்தனா். அதை கேட்காத அந்த நபா் போலீஸாரை கத்தியால் குத்தி விடுவதாக கூறி மிரட்டியுள்ளாா். இதையடுத்து அவரை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டனா்.
கீழே விழுந்த நபா் அதேஇடத்தில் உயிரிழந்து விட்டதாக பின்னா் அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடா்புடையதாக கருதவில்லை என போலீஸாா் தெரிவித்தனா்.
லண்டனில் அண்மை காலமாக கத்திகுத்து சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகாா்கள் எழுந்துள்ளன. அண்மையில், லண்டனில் நடைபெற்ற 2 தாக்குதல்கள் பயங்கரவாதம் குறித்த அச்சத்தை எழுப்பின.
கடந்த 2017-ஆம் ஆண்டு வெஸ்ட்மின்ஸ்டா் பாலத்தில் 5 போ் கொல்லப்பட்ட பிறகு பிரிட்டன் நாடாளுமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...