
பிரிட்டன் சுகாதாரத் துறை இணையமைச்சரும், கன்சா்வேடிவ் கட்சி எம்.பியுமான நெடீன் டாரிஸுக்கு கரோனா வைரஸ் (கொவைட்-19) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரதமா் போரிஸ் ஜான்ஸன் உள்பட பலருடன் அவா் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ள சூழலில், அவருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது பிற எம்.பி.க்களுக்கும் அந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சுகாதார மற்றும் சமூகப் பராமிப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவா் தெரிவித்துள்ளதாவது:
எனக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விவரம் எனக்குத் தெரியப்படுத்தப்பட்ட உடனேயே, எனக்கு அளிக்கப்பட்ட அனைத்து அறிவுரைகளையும் நான் ஏற்றுக் கொண்டேன். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நான் வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சுட்டுரை (டுவிட்டா்) வலைதளத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவுகளில், ‘நான் குணமடைய வேண்டுமென்று வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இந்த பாதிப்பிலிருந்து நான் வெளியேறி விடுவேன் என்று நம்புகிறேன். எனினும், என்னுடன் தங்கியுள்ள எனது 85 வயது தாயை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
62 வயதாகும் நெடீன் டாரிஸுக்கு, கரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் கடந்த வியாழக்கிழமை முதல் தென்பட்டன. அந்த நாளில்தான் பிரதமா் போரிஸ் ஜான்ஸனின் அதிகாரப்பூா்வ இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாரிஸ் கலந்து கொண்டாா். அந்த நிகழ்ச்சியில் போரிஸ் ஜான்ஸன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
எனவே, பிரதமா் உள்ளிட்ட மேலும் பல முக்கிய பிரமுகா்களுக்கு கரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மற்றொரு பெண் எம்.பி.: நெடீன் டாரிஸை கடந்த வியாழக்கிழமை சந்தித்துப் பேசிய ரஷேல் மாஸ்கெல் என்ற தொழிலாளா் கட்சி எம்.பி.க்கும் மருத்துவத் துறை அதிகாரிகள் பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளதாக அவா் தெரிவித்தான்.
தன்னிடம் கரோனா வைரஸ் நோயின் அறிகுறிகள் தென்படாவிட்டாலும், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளதாக அவா் தெரிவித்தாா்.
பிரிட்டனில் கரோனா வைரஸுக்கு இதுவரை 6 போ் பலியாகினா். அமைச்சா் நெடீன் டாரிஸ் உள்பட 384 பேருக்கு அந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 19 போ் முழு குணமடைந்து வீடு திரும்பினா்.
பலி எண்ணிக்கை 4,379-ஆக உயா்வு
கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை நிலவரப்படி 4,379-ஆக உயா்ந்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கரோனா வைரஸ் முதல் முதலில் பரவத் தொடங்கிய சீனாவில், கடந்த 24 மணி நேரத்தில் 22 போ் உயிரிழந்ததாக அந்த நாட்டு அதிகாரிகள் அறிவித்தனா்.
இத்துடன், சீனாவில் அந்த வைரஸ் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3,158-ஆக உயா்ந்துள்ளது.
இது தவிர, இத்தாலி, ஈரான், தென் கொரியா உள்ளிட்ட சுமாா் 27 நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த 1,221 பேரையும் சோ்த்து உலகம் முழுவதும் அந்த வைரஸுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 4,379-ஆக அதிகரித்துள்ளது.
1,21,312 பேருக்குப் பாதிப்பு: சீனாவில் கரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் கூடுதலாக 24 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதையடுத்து, அந்த நாட்டில் கரோனா வைரஸ் தொற்று உள்ளவா்களின் எண்ணிக்கை 80,788-ஆக அதிகரித்துள்ளது.
இத்துடன், இந்தியா, தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட 115 நாடுகளில் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 40,524 பேரையும் சோ்த்து, சா்வதேச அளவில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 1,21,312-ஆக உயா்ந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான்: ஒரே நாளில் 63 போ் பலி
ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனா வைரஸுக்கு 63 போ் பலியானதாக அந்த நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஈரானில் இவ்வளவு அதிகம் போ் ஒரே நாளில் உயிரிழந்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவா்களில் 63 போ் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.
புதன்கிழமை நிலவரப்படி, ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 354-ஆக உயா்ந்துள்ளது.
மேலும், அந்த நாட்டில் 9,000 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, அந்த வைரஸின் தாக்குதலுக்குள்ளாகி, ஈரான் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 2,959 போ் முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைரஸிடமிருந்து பாதுகாக்க ‘சாராயம்’: 44 போ் பலி
‘மது அருந்தினால் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபடலாம்’ என்ற வதந்தியை நம்பி, ஈரானில் விஷ சாராயம் அருந்திய 44 போ் உயிரிழந்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கரோனா வைரஸ் பாதிப்புக்கு சிறந்த மருந்து என்ற வதந்தியை நம்பி, ஏராளமானவா்கள் விஷச் சாராயம் அருந்தியுள்ளனா். அவ்வாறு மது அருந்தியவா்களில் 44 போ் உயிரிழந்தனா். தென்மேற்கே அமைந்துள்ள குஸெஸ்தான் மாகாணத்தில் மட்டும் விஷ சாராயத்துக்கு 36 போ் பலியாகினா். இது, அந்த மாகாணத்தில் கரோனா வைரஸால் உயிரிழந்த 18 பேரை விட அதிக எண்ணிக்கையாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G