கரோனா வைரஸை அமெரிக்க ராணுவம் பரப்பியிருக்கலாம்: சீனா குற்றச்சாட்டு

சீனாவுக்குள் அமெரிக்க ராணுவம்தான் கரோனா வைரஸைப் பரப்பியிருக்கலாம் என்று அந்த நாட்டு அதிகாரி புதிய குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
கரோனா வைரஸ்
கரோனா வைரஸ்

பெய்ஜிங்: சீனாவுக்குள் அமெரிக்க ராணுவம்தான் கரோனா வைரஸைப் பரப்பியிருக்கலாம் என்று அந்த நாட்டு அதிகாரி புதிய குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

எவ்வித ஆதாரமும் இல்லாமல், இதுபோன்றதொரு கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்திருப்பது சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஸோ லிஜியான்.

ஏற்கனவே சீனாவில் இருந்து இயங்கும் சமூக வலைத்தளங்களில் இதுபோன்றதொரு குற்றச்சாட்டு ஏற்கனவே பரவி வந்த நிலையில், சீனாவில் கரோனா வைரஸை அமெரிக்க ராணுவம் பரப்பியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு சீன அதிகாரியே முன் வைத்துள்ளார்.

ஏற்கனவே, சீனாவின் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், வூஹான் இறைச்சி சந்தைகளில் விற்பனை செய்யப்பட்ட வன விலங்குகளின் இறைச்சியின் மூலம்தான் இந்த கரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கரோனா வைரஸை வூஹான் வைரஸ் என்று அமெரிக்க அதிகாரிகள் அழைப்பதற்கு பதிலடியாக, சீன அதிகாரிகள் இதுபோன்றதொரு குற்றச்சாட்டை எழுப்பி வருகிறார்கள் என்றே கருதப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டு குறித்து கூறியிருக்கும் ஸோ, அமெரிக்காவில் எத்தனை பேருக்கு கரோனா பாதித்துள்ளது? எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்? இந்த வைரஸை வூஹானுக்கு அமெரிக்க ராணுவம்தான் கொண்டு வந்திருக்கும், வெளிப்படையாக இருங்கள். உங்களது தகவல்களை வெளி உலகுக்குத் தெரிவியுங்கள். அமெரிக்கா இது குறித்து நிச்சயம் விளக்கம் அளிக்க வேண்டும். என்று தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து ஆயிரத்துக்கும் மேல் ஆகிவிட்டது, 1.30 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இப்படியொரு குற்றச்சாட்டை சீனா வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதற்கு அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் மறுப்புத் தெரிவித்துள்ளார். இது வூஹான் நகரில் இருந்துதான் பரவியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com