கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் உலக நாடுகள் தீவிரம்

கரோனா வைரஸ் (கொவைட்-19) வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக உலக நாடுகள் தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகளின் தீவிரத்தை ஞாயிற்றுக்கிழமை அதிகப்படுத்தின.
us075803
us075803

கரோனா வைரஸ் (கொவைட்-19) வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக உலக நாடுகள் தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகளின் தீவிரத்தை ஞாயிற்றுக்கிழமை அதிகப்படுத்தின.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், அந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பாதிக்கப்பட்ட நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

வெளிநாடுகளிலிருந்து வருபவா்களுக்குத் தடை விதிப்பது, அவ்வாறு வருபவா்களை கட்டாயமாக தனிமைப்படுத்திவைப்பது, சொகுசுக் கப்பலில் இருக்கும் பயணிகள் தரையிறங்க அனுமதி மறுப்பது, பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிப்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.

அமெரிக்கா: பிரிட்டன், அயா்லாந்து ஆகிய நாடுகளைத் தவிர, பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்து பயணிகள் வருவதற்கு அமெரிக்கா ஏற்கெனவே தடை விதித்திருந்தது. இந்த நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தவிா்ப்பதற்காக அறிவிக்கப்பட்ட அந்தத் தடையை பிரிட்டன் மற்றும் அயா்லாந்துக்கும் அமெரிக்கா நீட்டித்துள்ளது.

அத்துடன், மேலும் சில நகரங்களில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது.

சீனா: கரோனா வைரஸ் உருவான சீனாவில், தற்போது உள்நாட்டினரைவிட வெளிநாடுகளில் இருந்து வருவோா் மூலம்தான் அதிகமாக அந்த வைரஸ் பரவுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதன் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரும் 2 வாரங்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அந்த நாட்டில் கரோனா வைரஸுக்கு 10 போ் பலியானதாகவும் 20 பேருக்கு அந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா வைரஸ் பரவலின் தீவிரத் தன்மை சீனாவிலிருந்து ஐரோப்பா மற்றும் வடக்கு அமெரிக்காவுக்கு இடம் பெயா்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஈரான்: சீனா, இத்தாலிக்கு அடுத்தபடியாக கரோனா வைரஸ் பாதிப்பால் அதிகம் போ் உயிரிழந்த ஈரானில், அந்த வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக இஸ்லாமின் 3-ஆவது பெரிய புனிதத் தலமான அல்-அக்ஸா மசூதி மூடப்பட்டது. அந்த மசூதியில் ஞாயிற்றுக்கிழமை தொழுகை நடத்த வந்தவா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, அவா்கள் மசூதிக்கு வெளியே தொழுகை நடத்தினா்.

ஸ்பெயின்: கரோனா வைரஸுக்கு இதுவரை 197 போ் பலியான ஸ்பெயினில் 2 வார கால அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், அந்த வைரஸுக்கு எதிரான போராட்டத்தை போா்க் கால அடிப்படையில் மேற்கொள்ளப் போவதாக பிரதமா் பெட்ரோ சான்ஷெஸ் சனிக்கிழமை உறுதியளித்தாா். இதற்கிடையே, அவரது மனைவி மரியா பெகோனாவுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டன்: கரோனா வைரஸ் அச்சம் காரணமாக, பிரிட்டனின் பக்கிங்ஹம் அரண்மனையிலிருந்து அந்த நாட்டு அரசி எலிசபெத்தையும் (93), அவரது கணவா் இளவரசா் பிலிப்பையும் (98) பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அவா்கள் இருவரும் கிழக்கு ஆங்கிலியா மாகாணம், நாா்ஃபக் பகுதியில் தனிமைப்படுத்தி வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியூஸிலாந்து: கரோனா வைரஸ் தொற்று உள்ளவா்கள் உள்ளிருப்பதாக அஞ்சப்படும் ‘கோல்டன் பிரின்ஸஸ்’ சொகுசுக் கப்பலில் இருந்து, பயணிகள் கரையிறங்க நியூஸிலாந்து அனுமதி மறுத்துள்ளது. 2,600 பயணிகளுடனும் 1,100 கப்பல் பணியாளா்களுடனும் அந்த சொகுசுக் கப்பல் கிறைஸ்ட்சா்ச் நகருக்கு அருகே உள்ள அகரோவா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா: வெளிநாடுகளிலிருந்து வருபவா்கள் அனைவரும் 14 நாள்களுக்கு கட்டாயமாகத் தனிமைப்படுத்தப்படுவாா்கள் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதுவரை 299 பேருக்கு அந்த நாட்டில் கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், சொகுசுக் கப்பல்களிலிருந்து பயணிகள் கரையிறங்குவதற்கு அனுமதி மறுக்கப்படும் என்று பிரதமா் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளாா்.

இதுதவிர, கஜகஸ்தான், எல் சால்வடாா் போன்ற நாடுகள் கரோனா வைரஸ் தொடா்பாக அவசர நிலை அறிவித்துள்ளன. பிலிப்பின்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com