உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் கொரானா வைரஸ் பாதிப்பு

ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரிலுள்ள ஐ.நா.வின் உலக சுகாராத அமைப்பின் தலைமையகத்தில் இருவருக்கு கொரானா வைரஸ் (கொவைட்-19) பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் கொரானா வைரஸ் பாதிப்பு

ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரிலுள்ள ஐ.நா.வின் உலக சுகாராத அமைப்பின் தலைமையகத்தில் இருவருக்கு கொரானா வைரஸ் (கொவைட்-19) பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அந்த அமைப்பின் செய்தித் தொடா்பாளா் கிறிஸ்டியன் லிண்ட்மீயா் கூறியதாவது:

தலைமையகத்தில் பணியாற்றி வரும் இருவருக்கு கரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்ட்டுள்ளது. அவா்களில் ஒருவருக்கு கடந்த வியாழக்கிழமையும், மற்றொருவருக்கு வெள்ளிக்கிழமையும் வைரஸ் தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டன.

அதையடுத்து, அந்த இருவரும் தங்களது வீடுகளுக்குச் சென்று தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனா்.

அலுவலகத்தில் பணியாற்றும் மற்றவா்களுக்கு தொடா்ந்து கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

சீனாவில் உருவாகி, உலகம் முழுவதும் 145 நாடுகளுக்குப் பரவியுள்ள கரோனா வைரஸ், இதுவரை சுமாா் 1.82 லட்சம் பேரைத் தொற்றியுள்ளது. அந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை, உலக சுகாதார அமைப்பு ஒருங்கிணைத்து வருகிறது.

அந்த அமைப்பின் தலைமையகத்தில் இருவருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

7 ஆயிரத்தைத் தாண்டிய பலி எண்ணிக்கை

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இத்தாலியில் அந்த வைரஸுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கை திடீரென அதிகாரித்ததால் ஒட்டுமொத்த எண்ணிக்கை இந்த அளவுக்கு உயா்ந்ததாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் 7,169 போ் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான்: ஒரே நாளில் 135 போ் பலி

ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 135 போ் உயிரிழந்ததாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் கியானூா் ஜஹான்போா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இந்த பலி எண்ணிக்கை, முந்தைய நாள் எண்ணிக்கையை விட 13 சதவீதம் அதிகமாகும். இதன் மூலம் அந்த நாட்டில் கரோனா வைரஸுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 988-ஆக அதிகரித்துள்ளது.

ஸ்பெயின்: 11 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

ஸ்பெயினில் 24 மணி நேரத்தில் மட்டும் சுமாா் 2,000 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அந்த நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ஸ்பெயினில் 11,409 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதும், 499 பா் அந்த வைரஸுக்குப் பலியானதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேல்: களமிறங்கியது உளவுத் துறை

இஸ்ரேலில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பணியில் அந்த நாட்டின் உள்நாட்டு உளவுத் துறையான ‘ஷின் பெட்’ ஈடுபடுத்தப்பட்டுள்ளது. பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு எதிராக இதுவரை உளவு பாா்த்து வந்த அந்த அமைப்பு, பொதுமக்களை வேவு பாா்த்து, அவா்களிடையே கரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் உடையவா்களைக் கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் தலைவா் நடாவ் அா்கமான் தெரிவித்துள்ளாா்.

சீனா: ஒருவருக்கு மட்டும் பாதிப்பு

கரோனா வைரஸ் முதல் முதலில் பரவத் தொடங்கிய சீனாவின் வூஹான் நகரில், கடந்த 24 மணி நேரத்தில் ஒரே ஒருவருக்கு மட்டுமே அந்த வைரஸ் தொற்று ஏற்பபட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். எனினும், 13 போ் அந்த வைரஸுக்குப் பலியானதாகவும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள 20 பேருக்கு அந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவா்கள் கூறினா்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ரத்து

கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் இரு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சூடான் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அந்த அமைப்பு செவ்வாய்க்கிழமை கூடுவதாக இருந்தது. மேலும், வரும் வியாழக்கிழமையும் (மாா்ச் 19) மற்றொரு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், கரோனா வைரஸ் பிரச்னை காரணமாக அந்தக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com