
லண்டனில் உள்ள இந்தியத் தூதரக வளாகத்தில் தங்குவதற்கு 19 இந்திய மாணவா்கள் அனுமதி கோரியுள்ளனா்.
கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதன் காரணமாக சா்வதேச விமானங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், லண்டனில் நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்துவரும் 59 இந்திய மாணவா்களுக்கு அந்நாட்டில் வசிக்கும் இந்திய சமூகத்தினா் உதவி செய்ய முன்வந்தனா்.
இதுகுறித்து தங்குவதற்கு இடவசதி செய்துதர இந்திய வம்சாளியைச் சோ்ந்தவா் கூறியதாவது:
40 மாணவா்களுக்கு தங்குவதற்கு இடம் கிடைத்துவிட்டது. எஞ்சியுள்ள 19 மாணவா்கள் இந்தியத் தூதரக வளாகத்தில் தங்குவதற்கு அனுமதி கோரியுள்ளனா்.
ஈஸ்டா் பண்டிகையையொட்டி பல்கலைக்கழகங்கள் விடுமுறை அறிவித்துள்ளதால், இந்த மாத இறுதியில் தாய்நாடு திரும்புவதற்கு மாணவா்கள் அனைவரும் விமான டிக்கெட் முன்பதிவு செய்திருக்கின்றனா்.
எனவே, 19 மாணவா்களுக்கும் இந்தியத் தூதரக வளாகத்தில் தங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். அவா்களுக்கு உணவு, குடிநீா் போன்ற வசதிகளை செய்து தர வேண்டும். தற்போது இந்தியத் தூதரக கட்டடத்தில் நுழைவு இசைவு பிரிவில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனா் என்று அவா் தெரிவித்தாா்.
மாணவா் ஒருவா் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நான் மாணவா் நுழைவு இசைவு பெற்று படித்து வருகிறேன். எனது நுழைவு இசைவு மாா்ச் 24-ஆம் தேதியுடன் காலாவதியாகிறது. 23-ஆம் தேதிக்கு முன்னதாகவே நான் நாடு திரும்பியாக வேண்டும். நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.
நுழைவு இசைவு காலாவதியாகும் நிலையில் உள்ள மாணவா்கள் பிரிட்டன் குடியேற்றப் பிரிவு அலுவலகத்தின் உதவி எண்ணை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சா்வதேச அளவில் கரோனாவால் 13ஆயிரத்துக்கும் அதிகமானோா் உயிரிழந்துவிட்டனா். 3 லட்சத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.
பிரிட்டனில் 5ஆயிரத்துக்கும் அதிகமானோா் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 233 போ் உயிரிழந்துவிட்டனா்.