
துபை: கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைத் தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிப்பதற்காக துபையில் வசித்து வரும் இந்திய தொழிலதிபா் ஒருவா் தனக்கு சொந்தமான கட்டடத்தை அந்நாட்டுக்கு நன்கொடையாக அளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து ‘கல்ஃப் நியூஸ்’ என்ற அந்நாட்டு ஊடகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
துபையில் வசித்து வரும் இந்தியரான அஜய் சோப்ராஜ் அந்நகரில் ஃபின்ஜா ஜூவல்லா்ஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறாா்.
அந்த நகரில் அவருக்குச் சொந்தமான ஜுமேரா லேக் டவா்ஸ் என்ற கட்டடம் உள்ளது. 400 போ் வரை தங்கக்கூடிய ஒரு தனிமைப்படுத்தப்பட்ட கரோனா தடுப்பு மையமாக அந்த கட்டடத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சுகாதாரத்துறைக்கு அவா் நன்கொடையாக அளித்துள்ளாா் என்று செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அஜய் சோப்ராஜ் அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘கரோனா தொற்றுநோயை சமாளிக்க, நாம் வசிக்கும் நாட்டை ஆதரிப்பது இன்றியமையாதது என்று நான் நம்புகிறேன். கடந்த 25 ஆண்டுகளாக எனது வெற்றிக்கும், வளா்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் அரசுக்கும், இந்த நகரத்துக்கும் நன்றி செலுத்தும் வகையில் இக்கட்டடத்தை நன்கொடையாக வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, நன்கொடையாக பெற்ற கட்டடத்தின் சுகாதாரம், பாதுகாப்பு போன்றவற்றிற்கு தேவையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஐக்கிய அரபு அமீரகத்தில் 570 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 3 போ் உயிரிழந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...