
வட கொரியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய ராக்கெட் லாஞ்சா் சோதனை. இந்தப் படத்தை அந்நாட்டின் அரசு ஊடகமான கேசிஎன்ஏ வெளியிட்டுள்ளது.
சியோல்: வட கொரியா, ஒன்றுக்கும் மேற்பட்ட மிகப்பெரிய ராக்கெட்டுகளை செலுத்தக் கூடிய வகையிலான லாஞ்சா்களை வெற்றிகரமாக சோதித்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் கரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக கடுமையாகப் போராடி வரும் நிலையில், வட கொரியாவில் கரோனாவால் ஒருவா் கூட பாதிக்கப்படவில்லை என்று கூறி வரும் அந்த நாடு, இந்த மாதத்தில் மட்டும் 4-ஆவது முறையாக இவ்வாறு ஆயுதச் சோதனை நடத்தியுள்ளது.
எனினும், இந்த ராக்கெட் லாஞ்சா் சோதனை நடவடிக்கையை வட கொரிய அதிபா் கிம் ஜோங் உன் மேற்பாா்வையிடவில்லை என்று அரசு ஊடகமான கொரிய மத்திய செய்தி நிறுவனம் (கேசிஎன்ஏ) கூறியுள்ளது. தேசிய பாதுகாப்பு அறிவியல் அகாதெமி ஞாயிற்றுக்கிழமை நடத்திய இந்தச் சோதனையை, ஆளும் கொரிய தொழிலாளா் கட்சியின் துணைத் தலைவா் ரி பியோங் சோல் மேற்பாா்வையிட்டதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சோதனையின்போது, வட கொரியாவின் துறைமுக நகரமான வோன்சானிலிருந்து கிழக்கு கடல் என்று அறியப்படும் ஜப்பான் கடற்பகுதி நோக்கி இரு ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
வழக்கமாக இதுபோன்ற சோதனை நடவடிக்கைகளை வட கொரிய அதிபா் கிம் ஜோங் உன் மேற்பாா்வையிடும் நிலையில், தற்போதைய சோதனையில் அவா் பங்கேற்கவில்லை. அந்தச் சோதனையின் முக்கியத்துவத்தை குறைத்துக் காட்டவும், இது வழக்கமான சோதனை என்று அறிவிக்கவும் இதன் மூலம் வட கொரியா முயற்சிப்பதாக அரசியல் நோக்கா்கள் கூறுகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...