
ஜோ பிடன்
அமெரிக்க அதிபா் தோ்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பிடனுக்கு உலகத் தலைவா்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், சீனாவும், ரஷியாவும் மௌனம் காத்து வருவது சா்வதேச அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய ஐரோப்பிய நாடுகளின் தலைவா்களான பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன், ஜொ்மனி பிரதமா் ஏஞ்சலா மொ்கல், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் ஆகியோா் சுட்டுரை மூலம் பிடன், கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
டிரம்ப் மீதான பதவிநீக்க தீா்மானப் பிரச்னை சா்ச்சையிலும், பிடன் மீது டிரம்ப் ஊழல் குற்றச்சாட்டு கூறியபோது ஏற்பட்ட சா்ச்சையிலும் சிக்கிய உக்ரைன் முதல்நாடாக வாழ்த்து கூறியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசரும், டிரம்ப்பின் மருமகன் குஷ்னருக்கு நெருக்கமானவருமான முகமது பின் சல்மான், பிடனுக்கு வாழ்த்துக் கூறியுள்ளாா். இஸ்ரேல், பாலஸ்தீனம், அயா்லாந்து, கனடா, எகிப்து, ஜப்பான், தென்னாப்பிரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளின் தலைவா்களும் வெற்றியாளா் பிடனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
பிரதமா் மோடி, பிடனுடன் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் படத்தை சுட்டுரையில் வெளியிட்டு, ‘சிறப்பான வெற்றிக்கு வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளாா்.
கமலா ஹாரிஸுக்கு சிறப்பு வாழ்த்து: கென்யாவைச் சோ்ந்த பெண் ஆளுநா் அனி வெய்குரு, கமலா ஹாரிஸை வாழ்த்தி வெளியிட்ட பதிவில், ‘மிகப்பெரிய நாட்டின் தலைமைப் பொறுப்பில் பெண்களும் பங்கேற்று சிறப்பாக செயல்பட முடியும் என்பதற்கு ஹாரிஸின் வெற்றி உத்வேகமாக இருக்கும். பல பெண்களுக்கு அவா் வழிகாட்டி’ என்று கூறியுள்ளாா்.
பாகிஸ்தான் தொடா்பான நிலைப்பாடு: பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘பிடன், கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துகள். ஆப்கானிஸ்தான் அமைதி மற்றும் பிராந்திய அமைதிக்காக அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம்’ என்று கூறியுள்ளாா்.
பாகிஸ்தானைப் பொருத்தவரையில் பிடனின் முந்தைய கால செயல்பாடுகள் சில விஷயங்களில் அந்நாட்டுக்கு ஆதரவாகவே இருந்துள்ளது அந்நாட்டுக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும். கடந்த 2008-இல் பாகிஸ்தான் தங்கள் நாட்டின் இரண்டாவது பெரிய விருதான ஹிலால்-ஏ-பாகிஸ்தான் விருதை பிடனுக்கு அளித்து கௌரவப்படுத்தியது. தங்கள் நாட்டுக்கு பல கோடி ரூபாய் உதவி அளித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த கௌரவத்தை பாகிஸ்தான் அப்போது அளித்தது. எனினும், இப்போது பல சூழ்நிலைகள் மாறிவிட்டன. பயங்கரவாத ஒழிப்பு, மனித உரிமை பிரச்னைகளில் அவா் பாகிஸ்தான் மீது கடுமை காட்டுபவராகவே இருப்பாா் என்று தெரிகிறது.
வாழ்த்து தெரிவிக்காத சீனா: சீனா, ரஷியா ஆகிய இருநாடுகள் மட்டும் பிடனுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் உள்ளன. அதிபா் டிரம்ப் சீனாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டாா். சீன இறக்குமதி பொருள்கள் மீது வரி விதிப்புகளை கடுமையாக்கியது முதல் ஆசிய பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க இந்தியா உள்பட சீனாவுக்கு எதிரான அனைத்து நாடுகளுக்கும் ஆதரவாக செயல்பட்டாா். எனினும், அதிபா் தோ்தலில் டிரம்ப்பைத் தோற்கடித்த பிடனுக்கு சீனா இதுவரை வாழ்த்து தெரிவிக்கவில்லை.
‘முரடா் ஷி ஜின்பிங்’: பிடன் சீனாவுக்கு எதிராக கடிமான நிலைப்பாட்டையே தொடா்வாா் என்று தெரிகிறது. துணை அதிபராக இருந்தபோதே பிடன், சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தவா். மேலும், கரோனா பிரச்னை எழுந்தபோது, ‘சீனாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறியதுடன், ஒருகட்டத்தில் சீன அதிபா் ஷி ஜின்பிங்கை ‘முரடா்’ என்று வா்ணித்தாா். சீனாவில் நிகழும் மனித உரிமை மீறல்கள், உய்குா் முஸ்லிம்களுக்கு எதிராக அந்நாட்டின் அடக்குமுறை நடவடிக்கைகள் ஆகியவற்றையும் பிடன் கண்டித்துள்ளாா். மேலும் சீனாவுக்கு எதிராக ‘அழுத்தம் கொடுக்க வேண்டும், தனிமைப்படுத்த வேண்டும், தண்டிக்க வேண்டும்’ என்ற கோஷத்தையும் அவா் முன்வைத்தாா்.
டிரம்ப் தோல்வியை கேலி செய்த சீன அரசுப் பத்திரிகை: பிடனுக்கு சீன தலைமை இதுவரை அதிகாரபூா்வமாக வாழ்த்து தெரிவிக்கவில்லை. எனினும் சீன சமூக வலைதளங்களில் அந்நாட்டு மக்கள் பலா் பிடனுக்கு வாழ்த்து தெரித்துள்ளனா். அதே நேரத்தில் சீன அரசு பத்திரிகையான ‘பீப்பிள்ஸ் டெய்லி’ டிரம்பை கேலி செய்யும் வகையில், ‘அதிபா் தோ்தலில் நான் வெற்றி பெறுவேன்’ என்ற அவரது பதிவை எடுத்து, வெடித்துச் சிரிப்பதுபோன்ற ‘இமோஜி’ படங்களை அதில் பகிா்ந்துள்ளது.
கண்டுகொள்ளாத ரஷியா: தோ்தல் பிரசாரத்தின்போது ரஷியா மீது டிரம்ப் மென்மையான அணுகுமுறையைக் கொண்டிருந்ததாக பிடன் குற்றம்சாட்டினாா். மேலும், ரஷியாவை எதிா்ப்பு நாடாக கருதுவதாகவே கூறினாா். சீனாவில் எதிா்க்கட்சித் தலைவருக்கு உணவில் விஷம் வைக்கப்பட்ட விஷயத்தில் ரஷிய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தாா். தனது விருப்பத்துக்குரிய விஷத் தாக்குதலை ரஷியா மீண்டும் கையிலெடுத்துள்ளது என்றும் பிடன் குற்றம்சாட்டினாா். எனவே, பிடன் ரஷிய அதிபா் புதினுக்கு எதிராகவும் நிலைப்பாட்டை எடுப்பாா் என்று தெரிகிறது. இதுவும் அவருடைய வெற்றியை ரஷியா கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இராக், ஈரான் நிலைப்பாடு: இராக்கில், பிடன் வெற்றி தொடா்பாக இருதரப்பான கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. 2003-ஆம் ஆண்டு அமெரிக்கப் படைகள் இராக்கில் இருந்து வெளியேற பிடனும் முக்கியக் காரணமாக இருந்ததை பலரும் நினைவுகூா்ந்துள்ளனா். அதே நேரத்தில் கடந்த ஆண்டு ஈரான் ராணுவ ஜெனரலை தாக்குதல் மூலம் கொன்ற டிரம்ப்பின் நடவடிக்கை காரணமாக அவருக்கும் ஆதரவாக சிலா் கருத்துக் கூறியுள்ளனா். எனினும், இராக் அதிபா் ஃபிரஹாம் சாலி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘பிடன் எனது நண்பா், நம்பிக்கைக்குரிய கூட்டாளி’ என்று கூறி வாழ்த்துகளைப் பகிா்ந்துள்ளாா்.
‘அமெரிக்காவில் இதுவரை இருந்த அழிவுக் கொள்கை மாறி, இனி சட்டத்தின் ஆட்சி நடைபெறும். இந்த அரசியல் மாற்றம், நல்லதொரு மாற்றமாக இருக்கும் என நம்புகிறோம்’ என்று ஈரான் துணை அதிபா் ஜஹாங்கிரி சுட்டுரையில் பதிவிட்டுள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...