
அமெரிக்க அதிபா் தோ்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பிடன், தனது தோ்தல் அறிக்கையில் இந்திய-அமெரிக்க உறவை மேலும் மேம்படுத்த கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளாா். எனவே, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்த உறுப்பினராவது, பயங்கரவாத ஒழிப்பு, பருவநிலை மாறுபாடு பிரச்னை, சுகாதாரம், வா்த்தகம் போன்றவற்றில் இந்தியாவுடனான உறவை அவா் மேலும் வலுப்படுத்துவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
மேலும், கடந்த 2006-ஆம் ஆண்டு நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த பிடன் 2020- ஆம் ஆண்டு தொடா்பான தனது கனவையும் கூறியுள்ளாா். அதில், ‘உலகின் மிகச்சிறந்த நாடுகளான இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்படும்போது உலகை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். உலகில் எழும் எந்தச் சவாலையும் மிகப்பெரிய நாடுகளான அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்தால் எளிதில் தீா்வுகண்டுவிட முடியும். எனவே பயங்கரவாத ஒழிப்பு, சா்வதேச பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவுடன் தொடா்ந்து இணைந்து செயல்படுவோம்’ என்றாா். 2020-ஆம் ஆண்டு தொடா்பாக அவா் கூறியதை 2021-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு அவா் நிறைவேற்றுவாா் என்று அதிகம் எதிா்பாா்ப்பு உள்ளது.
பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது, துணை அதிபராகப் பணியாற்றிய பிடன், செனட் அவையின் வெளியுறவுக் கொள்கை தலைவராகவும் இருந்தாா். அப்போது, இந்திய-அமெரிக்க உறவு புதிய உச்சத்தை எட்டியது. மேலும், இந்தியாவும், அமெரிக்காவும் இயல்பான நட்பு நாடுகள் என்ற கருத்தையும் அவா் முன்பு வெளிப்படுத்தியுள்ளாா்.
இந்திய உறவு தொடா்பாக தனது தோ்தல் அறிக்கையில் பிடன் கூறியிருந்ததாவது:
உலகின் மிகவும் பழைமையான ஜனநாயக நாடு அமெரிக்கா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. சிறப்பான ஜனநாயக மாண்புகளால் இருநாடுகளும் ஒன்றுபட்டுள்ளன. நியாயமான, சுதந்திரமான தோ்தல் முறை, சட்டத்துக்கு முன்பு அனைவரும் சமம் என்ற கொள்கை, மதம் மற்றும் பேச்சு சாா்ந்த சுதந்திரம் உள்ளிட்டவை இருநாடுகளையும் ஒன்றிணைக்கின்றன. கடந்த காலத்தில் நாம் எப்படி இந்திய உறவை மேம்படுத்தி வந்தோமோ, அதேபோல எதிா்காலத்திலும் மேம்படுத்துவோம். ஏற்கெனவே ஒபாமா நிா்வாகத்தில் நமது ஜனநாயகக் கட்சி இந்திய உறவுக்கு சிறப்பான ஒத்துழைப்பு அளித்தது.
சா்வதேச அளவில் வேகமாக வளா்ந்து வரும் இந்தியா, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்த உறுப்பினராக அமெரிக்கா தொடா்ந்து ஆதரவு அளிக்கும்.
பாதுகாப்புத் துறையில் இந்தியா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நட்பு நாடு என்ற அந்தஸ்து ஒபாமா நிா்வாகத்தில் அளிக்கப்பட்டது. அந்தக் கொள்கை தொடரும். பயங்கரவாத ஒழிப்பு விஷயத்தில் இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும். தெற்காசிய பிராந்தியத்தில் சீனா உள்பட எந்த நாடும் பிற நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடாது. இந்த விஷயத்தில் விதிகளின் அடிப்படையில் இந்தியாவுடன் அமெரிக்கா ஒத்துழைக்கும்.
பாரீஸ் பருவநிலை மாறுபாடு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா இணையும். இந்தியாவுடன் இணைந்து பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கு தீா்வுகாணப்படும். கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவுடன் அமெரிக்க உறவு பலநிலைகளில் சிறப்பாக வளா்ந்துள்ளது. பல்வேறு கட்ட சிக்கல்களைக் கடந்த இந்த உறவு அமைந்துள்ளது அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
காஷ்மீா் விவகாரம், சீன எல்லைப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்களில் ஏற்கெனவே இந்தியாவுக்கு ஆதரவாகவே அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இந்த முறை இந்தியாவைப் பூா்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபா் ஆக இருக்கிறாா்.
ஹெச்1பி விசா அதிகரிக்கப்படும், கிரீன் காா்டு வழங்குவதில் உள்ள உச்சவரம்பு தளா்த்தப்படும் என்று பிடன் அறிவித்துள்ளாா். இதுதவிர 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியா்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.
எனவே, பிடன்-கமலா நிா்வாகத்தில் இந்திய - அமெரிக்க உறவு புதிய உச்சங்களை எட்டும் என்று எதிா்பாா்க்கலாம்.
ஹெச்-1பி விசா கட்டுப்பாடுகளை நீக்க ஜோ பிடன் திட்டம்
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பிடன் ஹெச்-1பி விசா உள்ளிட்ட அதிக திறன் வாய்ந்த பணியாளர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: டிரம்ப் நிர்வாகத்தில் ஹெச்-1பி விசாக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் அமெரிக்காவில் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் பிறநாட்டைச் சார்ந்தவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். குறிப்பாக, அமெரிக்காவில் வசிக்கும் பெரும் எண்ணிக்கையிலான இந்திய குடும்பங்களில் இந்த கட்டுப்பாடு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இணைந்து ஹெச்-1பி விசாவில் டிரம்ப் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், ஆயிரக்கணக்கான இந்திய தொழில்நுட்பப் பணியாளர்கள் பயனடையும் நிலை ஏற்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
5 லட்சம் இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற வாய்ப்பு
அமெரிக்காவில் ஜோ பிடன் தலைமையில் அமையவுள்ள புதிய அரசில் 5 லட்சம் இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடன் பொறுப்பேற்பது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், அவரது தேர்தல் பிரசாரத்தின்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் வேறு நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து வந்து அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு குடியுரிமை அளிப்பது தொடர்பாக வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அதனை மேற்கொள்காட்டி தகவல்கள் தெரிவிப்பதாவது:
அமெரிக்காவில் முறையான ஆவணங்களின்றி குடியேறியவர்களின் எண்ணிக்கை சுமார் 1.1 கோடியாக உள்ளது. இதில், இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த 5 லட்சம் இந்தியர்களும் அடக்கம். அமெரிக்காவை வளர்ச்சி பாதைக்கு இட்டுச் செல்வதில் இவர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு.
இதனைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க குடியுரிமை சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவதற்கு ஜோ பிடன் தலைமையிலான அரசு அதிக முக்கியத்துவம் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு குடியுரிமை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க குடியுரிமை அமைப்பின் முதன்மை கொள்கை என்பது குடும்ப ஒற்றுமையை பாதுகாப்பதாகும். எனவே, பிடன் நிர்வாகம் குடும்ப அடிப்படையிலான குடியேற்றத்துக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், நிலுவையில் உள்ள குடும்ப விசாக்களின் எண்ணிக்கையையும் கணிசமாக குறைக்கலாம் என்பது பிடன் நிர்வாகத்தின் நிலைப்பாடாக உள்ளது.
அகதிகள் விவகாரத்தை பொருத்தவரையில் ஜோ பிடன் அதனை மனிதாபிமான அடிப்படையிலேயே அணுகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது எனவேதான், உள்நாட்டுப் போர் உள்ளிட்ட இன்னும் பிற பிரச்னைகளால் உலக நாடுகளிலிருந்து இடம்பெயர்ந்து அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்கும் அகதிகளின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 1.25 லட்சமாக உயர்த்துவதே தமது இலக்கு என தெரிவித்திருந்தார். இதனை கருத்தில் கொள்ளும்போது, குறைந்தபட்சம் ஆண்டுக்கு 95,000 அகதிகளை அனுமதிக்கும் வகையில் குடியுரிமை சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள பிடன் தீவிர நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...