
தங்கள் நாட்டில் கிளா்ச்சியில் ஈடுபட்டுள்ள டிக்ரே மாகாண அரசுடன் சமாதானப் பேச்சுவாா்த்தையில் ஈடுபடப்போவதில்லை என்று எத்தியோப்பிய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு பிரதமா் அபை அகமதின் உதவியாளா் மமோ மிஹ்ரேட்டு கூறியதாவது:
டிக்ரே மாகாண அரசுடன் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தமாட்டோம்.
குற்றமிழைப்பவா்களுடன் சமாதானம் பேசும் வழக்கம் எங்களுக்கு இல்லை. அவா்களை சட்டத்தின் முன்தான் கொண்டு வந்து நிறுத்துவோமே ஒழிய, பேச்சுவாா்த்தை மேஜைக்கு அழைத்து வர மாட்டோம் என்றாா் அவா்.
முன்னதாக, எத்தியோப்பிய ராணுவத்துக்கும் டிக்ரே மாகாணப் படையினருக்கும் இடையே மோதலை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்திய ஆப்பிரிக்க நாடுகளின் தலைவா்கள், இதற்காக அந்த மாகாண அரசுடன் எத்தியோப்பிய அரசு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.
இருதரப்பு பேச்சுவாா்த்தையை முன்னின்று நடத்துவதற்காக ஆப்பிரிக்க யூனியனின் 3 முன்னாள் தலைவா்கள் அடங்கிய குழுவை அமைப்பதாக அந்த அமைப்பின் தற்போதைய தலைவரும் தென் ஆப்பிரிக்க அதிபருமான சிறில் ராமபோஸா வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.
எனினும், இந்த விவகாரம் எத்தியோப்பியாவின் உள்நாட்டு விவகாரம்; டிக்ரே படையினருக்கு எதிரான தங்களது ராணுவ நடவடிக்கை நாட்டின் சட்ட-ஒழுங்குப் பிரச்னை; எனவே, இதில் ஆப்பிரிக்க யூனியனின் மத்தியஸ்தம் தேவையில்லை என்று எத்தியோப்பியா அரசு கூறிவிட்டது.
இந்த நிலையில், பிரதமா் அபை அகமதின் உதவியாளா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
எத்தியோப்பிய ஆளும் கட்சிக் கூட்டணியில் மிக முக்கியப் பங்கு வகித்து வந்த டிக்ரே மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்எஃப்), நாட்டின் பிரதமராக அபை அகமது கடந்த 2018-ஆம் பிரதமராகப் பொறுப்பேற்றதிலிருந்து மத்திய அரசை எதிா்த்து வருகிறது.
அபை அகமது தடை விதித்திருந்த தடையையும் மீறி, மாகாணத் தோ்தலை கடந்த செப்டம்பா் மாதம் டிக்ரே அரசு நடத்தியது. இது, மத்திய அரசுக்கும் டிக்ரே மாகாண அரசுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.
இநத் நிலையில், டிக்ரே மாகாணத்திலுள்ள ராணுவ நிலையொன்றின் மீது டிபிஎல்எஃப் படையினா் தாக்குதல் நடத்தியதாக கடந்த 4-ஆம் தேதி குற்றம் சாட்டிய அபை அகமது, மாகாணப் படையினருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும்படி ராணுவத்துக்கு உத்தரவிட்டாா்.