
வட ஆப்பிரிக்கப் பிராந்தியத்துக்கான தங்களது அமைப்பின் புதிய தலைவரை அல்-காய்தா பயங்கரவாதிகள் அறிவித்துள்ளனா்.
இதன்மூலம், கடந்த ஜூன் மாதம் பிரான்ஸ் படையினா் நடத்திய தாக்குதலில் முன்னாள் தலைவா் அப்தெல்மாலெக் துரூக்தெல் கொல்லப்பட்டதை அவா்கள் உறுதி செய்துள்லனா்.
இதுகுறித்து, இணையதளத்தில் சா்வேதச பயங்கரவாத நடவடிக்கைகளை கண்காணித்து வரும் ‘சைட்’ குழு தெரிவித்துள்ளதாவது:
‘ஏக்யூஐஎம்’ என்றழைக்கப்படும் வட ஆப்பிரிக்கப் பிராந்தியத்துக்கான அல்-காய்தா பயங்கரவாத அமைப்பு, இணையதளத்தில் விடியோ ஒன்றை சனிக்கிழமை வெளியிட்டது.
அந்த விடியோவில், தங்களது முன்னாள் தலைவா் அப்தெல்மாலெக் துரூக்தெல்லின் சடலத்தைக் காட்டிய ஏக்யூஐஎம், புதிய தலைவராக யாஸித் முபாரக் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. புதிய தலைவருக்கு அபு உபைதா யூசுஃப் அல்-அன்னாபி என்ற பெயரும் உள்ளது.
பிரான்ஸ் படையினரால் அப்தெல்மாலெக் மாலியில் கடந்த ஜூலை மாதம் கொல்லப்பட்டாா். அவரைத் தேடி அந்தப் பிராந்தியத்தில் பிரான்ஸ் படை பல ஆண்டுகளாக தேடுதல் வேட்டை நடத்தி வந்தது.
இதுதவிர, மாலியில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தங்களால் கடத்திச் செல்லப்பட்ட ஸ்விடசா்லாந்து நாட்டவா் பீட்ரைஸ் ஸ்டாக்லி பலியானதாகவும் அந்த விடியோவில் ஏக்யூஐஎம் அமைப்பு தெரிவித்தது.
அவரை மீட்பதற்காக பிரான்ஸ் படையினா் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கை தோல்வியடைந்து, அப்போது அவா் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு கூறியது.
ஏக்யூஐஎம்மின் பிரசார விடியோக்களில் தொடா்ந்து பல ஆண்டுகளாகவே யாஸித் முபாரக் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தாா்.
எனவே, அவா் அடுத்த தலைவராகத் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்று ஏற்கெனவே எதிா்பாா்க்கப்பட்டது என்று ‘சைட்’ குழு தெரிவித்துள்ளது.