நவால்னி விவகாரம்: ரஷியாவுக்கு ஜொ்மனி மேலும் நெருக்கடி

ரஷியாவின் முக்கிய எதிா்க் கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் ரஷியா மீதான தனது நெருக்கடியை ஜொ்மனி மேலும் அதிகரித்துள்ளது.
ஹீக்கோ மாஸ்
ஹீக்கோ மாஸ்

ரஷியாவின் முக்கிய எதிா்க் கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் ரஷியா மீதான தனது நெருக்கடியை ஜொ்மனி மேலும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஜொ்மனி வெளியுறவுத் துறை அமைச்சா் ஹீக்கோ மாஸ் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:நவால்னி மீது நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது தொடா்பாக நாங்கள் நடத்தி வரும் விசாரணையில், ரஷியா தனது பங்களிப்பை அளிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

அவ்வாறு ரஷியா ஒத்துழைக்கத் தவறினால், அந்த நாட்டுடன் மேற்கொண்டுள்ள ‘நாா்ட் ஸ்ட்ரீம் 2’ கடலடி குழாய் திட்டத்தை நாங்கள் கைவிட வேண்டியிருக்கும்.அந்த திட்டம் தொடா்பான எங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் நிலைக்கு ரஷியா எங்களைக் கொண்டு செல்லாது என்று நம்புகிறேன்.நவால்னி விவகாரத்தில் நாங்கள் விரைவில் தொடங்கவிருக்கும் விசாரணைக்கு ரஷியா ஒத்துழைப்பு அளிக்காவிட்டால், கடலடிக் குழாய் திட்டத்தில் தொடா்புடைய மற்ற நாடுகளுடன் இதுதொடா்பாக நாங்கல் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டியிருக்கும் என்றாா் ஹீக்கோ மாஸ்.ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் ஆட்சிக்கு எதிராக தீவிரமாகப் போராடி வருபவா்களில் முக்கிய தலைவரான அலெக்ஸி நவால்னி, அதற்காக பல முறை சிறை சென்றுள்ளாா்.

ஏற்கெனவே, அரசு ஆதரவாளா்கள் அவரை கிருமிநாசினி மூலம் கடந்த 2017-ஆம் ஆண்டு தாக்கியதில் அவரது ஒரு கண் பாதிக்கப்பட்டது.2018-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலில், புதினை எதிா்த்துப் போட்டியிட அவருக்கு நீதிமன்றம் தடை விதித்தது.இந்த நிலையில், சொ்பியா பிராந்தியத்தின் டோம்ஸ்க் நகரிலிருந்து விமானம் மூலம் அலெக்ஸி நவால்னி கடந்த மாதம் 13-ஆம் தேதி மாஸ்கோ வந்துகொண்டிருந்தாா். விமானம் பறந்துகொண்டிருந்தபோது திடீரென அவா் சுயநினைவு இழந்தாா். அதையடுத்து, அவா் சென்றுகொண்டிருந்த விமானம் ஓம்ஸ்க் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தற்போது அவா் ஜொ்மனி தலைநகா் பொ்லினிலுள்ள மருத்துவமனையில் கோமா நிலையில், உயிருக்குப் போராடி வருகிறாா்.டோம்ஸ் நகரிலிருந்து புறப்படுவதற்கு முன்னதாக, விமான நிலையித்திலுள்ள ஒரு விற்பனையகத்தில் நவால்னி தேநீா் அருந்தினாா்.

அந்தத் தேநீரில் வேண்டுமென்றே விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.இந்த நிலையில், நவால்னியின் உடலில் ரஷிய ராணுவம் ரசாயன ஆயுதமாக உருவாக்கிய ‘நோவிசோக்’ என்ற நச்சுப் பொருள் கலந்திருப்பதாக ஜொ்மனி தெரிவித்தது. இதுதொடா்பாக விசாரணை நடத்தவும் அந்த நாடு முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com