
வங்கதேசத்தில் வெடிவிபத்து ஏற்பட்ட மசூதி.
வங்கதேசத்திலுள்ள மசூதியொன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. 37 பேர் காயமடைந்தனா். எரிவாயு கசிந்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: தலைநகா் டாக்காவில், பைதுல் சலாத் பகுதில் அமைந்துள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் ஒரு சிறுவன் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த 17 பேரும், மசூதில் தொழுகை நடத்துவதற்காக வந்திருந்தனா்.
விபத்தில் காயமடைந்த மேலும் 37 பேர் டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீக்காயங்களுக்கான பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களது உடலில் 90 சதவீதம் எரிந்து போயுள்ளதால் அவா்களது நிலை கவலைக்கிடமாக உள்ளனர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சமையல் எரிவாயு குழாய் இணைப்பில் கசிவு ஏற்பட்டு, மசூதிக்குள் அந்த வாயு சூழந்திருக்கலாம் எனவும், அதன் காரணமாக மசூதிக்குள் இருந்த குளிரூட்டு சாதனங்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்தில், தீக்காயங்கள் மற்றும் புகையை சுவாசித்ததால் உயிரிழப்புகள் ஏற்பட்டன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், டாக்காவில் நிகழ்ந்த விபத்தில் 71 பேர் கொல்லப்பட்டனர். ஒரு மாதத்திற்குப் பிறகு, தலைநகரின் 22 அடுக்கு மாடி வணிக கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் கொல்லப்பட்டனர்.