இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளது: ஐ.நா. அறிக்கையில் தகவல்

இந்தியாவில் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை குழந்தைகள் இறப்பு விகிதம் பெருமளவில் குறைந்துள்ளதாக ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளது: ஐ.நா. அறிக்கையில் தகவல்

நியூயார்க்/புது தில்லி: இந்தியாவில் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை குழந்தைகள் இறப்பு விகிதம் பெருமளவில் குறைந்துள்ளதாக ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
உலக நாடுகளில் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறித்து ஐ.நா.வின் துணை அமைப்பான யுனிசெஃப், உலக சுகாதார அமைப்புடன் இணைந்து ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
உலக நாடுகளில் கடந்த 1990-ஆம் ஆண்டில் 1.25 கோடி 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் இறந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த 2019-ஆம் ஆண்டில் 52 லட்சமாக குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில் இந்தியாவில் 5 வயதை எட்டுவதற்குள் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 34 லட்சத்திலிருந்து 8.24 லட்சமாகக் குறைந்தது. 
கடந்த 1990-ஆம் ஆண்டில் இந்தியாவில் 1,000 குழந்தைகளுக்கு 126 பேர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் 34-ஆகக் குறைந்தது. இதன் மூலமாக சுமார் 30 ஆண்டுகளில் இந்தியாவில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் ஆண்டுதோறும் 4.5 சதவீதம் குறைந்துள்ளது. 
அதே வேளையில், இந்தியாவில் பிறந்து ஒரு வயதை எட்டுவதற்குள் இறக்கும் குழந்தைகளின் விகிதம் கடந்த 1990-ஆம் ஆண்டில் (1,000 குழந்தைகளுக்கு) 89-ஆக இருந்தது. இந்த விகிதம் கடந்த ஆண்டில் 28-ஆகக் குறைந்தது. அதே காலகட்டத்தில், பிறந்து 28 நாள்களுக்குள் இறந்த குழந்தைகளின் விகிதம் (1,000 குழந்தைகளுக்கு) 57 என்ற எண்ணிக்கையில் இருந்து 22-ஆகக் குறைந்துள்ளது.
இந்தியாவில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் மேம்பட்டுள்ளதன் காரணமாகவே குழந்தைகள் இறப்பு விகிதம் பெருமளவில் குறைந்துள்ளது. மேலும், குழந்தைகள் எடை குறைவாக பிறப்பதைத் தடுப்பது, பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்களைத் தடுப்பது, குழந்தைகளுக்கு போதுமான கால இடைவெளிகளில் தடுப்பூசி போடுவது உள்ளிட்டவற்றை இந்தியா திறம்பட மேற்கொண்டு வருகிறது என்று அந்த அறிக்கையில் 
குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com