
டாக்கா மசூதியில் வெடிவிபத்து ஏற்பட்ட பகுதியை ஆய்வு செய்த அதிகாரி.
டாக்கா: வங்கதேச மசூதியொன்றில் கடந்த வாரம் ஏற்பட்ட வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என்று அந்த நாட்டு அரசு எரிவாயு நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து டாக்கா உயா்நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:டாக்காவிலுள்ள பைதுல் சலாத் மசூதி வெடிவிபத்துக்கு, அரசுக்குச் சொந்தமான டைடஸ் கியாஸ் டிரான்ஸ்மிஷன் அண்டு டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனத்தின் அலட்சியமே காரணம்.
அந்த நிறுவனம் பதித்திருந்த எரிவாயுக் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாகவே, மசூதியிலுள்ள குளிரூட்டு சாதனங்கள் வெடித்துச் சிதறின.
எனவே, விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதற்குக் காரணமான டைடஸ் கியாஸ் நிறுவனம் தலா ரூ.4.35 லட்சம் (5 லட்சம் டாக்கா) இழப்பீடு வழங்க வேண்டும்.
இழப்பீட்டுத் தொகைகளை பட்டுவாடா செய்வதற்கு அந்த நிறுவனத்துக்கு 7 நாள்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டாக்காவின், பைதுல் சலாத் பகுதில் அமைந்துள்ள மசூதியில் கடந்த 4-ஆம் தேதி இரவு 9 மணிக்கு வெடிவிபத்து ஏற்பட்டது.
தரையில் பதிக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டு, மசூதிக்குள் அந்த வாயு சூழந்திருந்த நிலையில், அந்த மசூதிக்குள் இருந்த 6 குளிரூட்டு சாதனங்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின.
இந்த விபத்தில் 29 போ் உயிரிழந்தனா். 50 போ் காயமடைந்தனா்.விபத்தில் தீக்காயங்கள் மற்றும் புகையை சுவாசித்ததால் உயிரிழப்புகள் ஏற்பட்டன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.