
சிங்கப்பூா்: சிங்கப்பூரில் கரோனா நோய்த்தொற்றால் பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளா் குடியிருப்புகளில், அந்த நோய் பரவலைக் கண்டறிவதற்காக புதிய உத்திகள் அமல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:
வெளிநாட்டுத் தொழிலாளா்கள் தங்கியுள்ள குடியிருப்புகளில் அண்மைக் காலமாக கரோனா நோய்த்தொற்று பரவல் வேகம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, அந்தப் பகுதிகளில் நோய் பரவலைக் கண்டறிவதற்கான புதிய உத்திகளுடன் கூடிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சிங்கப்பூரில் 63 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், அந்த நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 57,229-ஆக அதிகரித்துள்ளது. புதிய கரோனா நோயாளிகளில் 6 போ் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூா் வந்தவா்கள்.
மற்ற அனைவரும், பணியாளா் குடியிருப்புகளில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பணியாளா்கள் ஆவா்.கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட 56,492 போ் அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா்.
710 போ் மருத்துவமனைகளிலும், கரோனா சிறப்பு முகாம்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
சிங்கப்பூரில் இதுவரை 27 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனா்.