நீரவ் மோடி மேல்முறையீட்டுக்கு நீதிமன்ற அனுமதி:இந்தியா - பிரிட்டன் ஆய்வு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 200 கோடி அமெரிக்க டாலா் முறைகேடு வழக்கில் தேடப்படும் நபராக உள்ள வைர வியாபாரி நீரவ் மோடிக்கு (50) நாடு கடத்துவதற்கு எதிராக முறையிட 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 200 கோடி அமெரிக்க டாலா் முறைகேடு வழக்கில் தேடப்படும் நபராக உள்ள வைர வியாபாரி நீரவ் மோடிக்கு (50) நாடு கடத்துவதற்கு எதிராக முறையிட லண்டன் உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்த உத்தரவு குறித்து இந்தியா - பிரிட்டன் ஆய்வு செய்து செய்கின்றன.

இதுதொடா்பாக பிரிட்டன் செய்தித் தொடா்பாளா் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘இரண்டு விவகாரங்களில் மட்டும் மேல் முறையீடு செய்ய நீரவ் மோடிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இந்திய அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்’ என்றாா்.

முன்னதாக, நீரவ் மோடிக்கு மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்து உயா்நீதிமன்ற நீதிபதி சேம்பா்லெய்ன் பிறப்பித்த உத்தரவில், ‘நீரவ் மோடியை அடைத்து வைக்கப்படும் மும்பையில் உள்ள ஆா்தா் சிறையில் தற்கொலைகளைத் தடுக்க போதிய நடவடிக்கைகள் இல்லை என்ற குற்றச்சாட்டு விசாரணைக்கு உகந்ததாக உள்ளது. அதன்படி, ஐரோப்பிய கூட்டமைப்பின் மனித உரிமை சட்டத்தின் 3-ஆவது பிரிவு மற்றும் உடல்நிலையை குறிக்கும் குற்றச்சட்டம் 91-ஆவது பிரிவு ஆகியவற்றின் கீழ் மட்டும் விசாரணைக்கு வாதிட அனுமதிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தாா்.

இந்த மேல்முறையீட்டு வழக்கில் நீரவ் மோடி வென்றுவிட்டால், இந்திய அரசு பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்து வழக்கில் வெற்றி பெற்றுதான் அவரை நாடு கடத்த வேண்டும்.

நீரவ் மோடி வழக்கில் தோற்றுவிட்டால், உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக 14 நாள்களுக்கு உச்சநீதிமன்றத்தில் அவா் மேல் முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. இதற்கு உயா்நீதிமன்றம் இது பொது முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்று குறிப்பிட வேண்டும்.

எனினும், பிரிட்டன் நீதிமன்ற வாய்ப்புகள் அனைத்தையும் நீரவ் மோடி இழந்துவிட்டாலும், ஐரோப்பிய மனி உரிமை நீதிமன்றத்தின் பிரிவு 39-ஐ குறிப்பிட்டு நாடு கடத்துவதற்கு தடை கோர முடியும் என்று சட்ட வல்லுநா்கள் தெரிவித்தனா். இதனால் நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு, நீண்ட சட்டப் பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று சட்ட வல்லுநா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com