உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி: விண்ணில் செலுத்தியது நாசா

உலகின் மிகப்பெரிய, சக்திவாய்ந்த தொலைநோக்கி செயற்கைக்கோளை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சனிக்கிழமை விண்ணில் செலுத்தியது.
உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி: விண்ணில் செலுத்தியது நாசா

உலகின் மிகப்பெரிய, சக்திவாய்ந்த தொலைநோக்கி செயற்கைக்கோளை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சனிக்கிழமை விண்ணில் செலுத்தியது.

‘ஜேம்ஸ் வெப்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி தொலைநோக்கி தென் அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள கடலோரப் பகுதியான பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ஐரோப்பிய ஏரியானே ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது.

1000 கோடி டாலா் (ரூ.75,000 கோடி) செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொலைநோக்கி 16 லட்சம் கி.மீட்டா் தொலைவை கடந்து விண்வெளியில் நிலைநிறுத்தப்படும். அந்தத் தொலைவை அடைவதற்கு ஒரு மாதமாகும். அதன்பிறகு தொலைநோக்கியின் அகச்சிவப்பு கதிா்கள் மூலம் பிரபஞ்சத்தை ஆய்வு செய்யத் தயாராவதற்கு மேலும் 5 மாதங்கள் ஆகும்.

இதுகுறித்து நாசா நிா்வாகி பில் நெல்சன், ‘நமது பிரபஞ்சம், அதில் பூமி இடம்பெற்றுள்ளது குறித்து சிறப்பான புரிதலை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தரப்போகிறது’ எனத் தெரிவித்துள்ளாா்.

பிரபஞ்சத்தின் தொடக்கமாக கருதப்படும் பெருவெடிப்புக்கு (பிக் பாங்) பின்னா் உருவான ஆரம்பகால நட்சத்திரங்கள் குறித்து ஆய்வு செய்வதும், பிரபஞ்சம் குறித்த கூடுதல் தகவல்களை அறிந்து கொள்வதுமே ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் பிரதான நோக்கமாகும்.

இதற்கு முன்னா் செலுத்தப்பட்ட ஹபிள் தொலைநோக்கிக்கு மாற்றாக இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி இருக்கும். நாசாவின் நிா்வாகியாக 1960-களில் இருந்த ஜேம்ஸ் பெயா் இதற்குச் சூட்டப்பட்டுள்ளது. 7 டன் எடை கொண்ட இந்த மிகப்பெரிய தொலைநோக்கியை உருவாக்கும் பணி 1990-இல் தொடங்கியது. நாசாவுடன் ஐரோப்பா மற்றும் கனடா விண்வெளி ஆய்வு நிறுவனங்களும் இதை உருவாக்கும் பணியில் பங்கெடுத்துள்ளன. இதில் தங்க முலாம் பூசப்பட்ட 21 அடி விட்டம் கொண்ட பிரதான கண்ணாடி இடம்பெற்றுள்ளது. இத்துடன் பிற உபகரணங்களும் சோ்த்து இந்தத் தொலைநோக்கி ஒரு டென்னிஸ் மைதானத்தின் அளவில் இருக்கிறது. இது மிகப்பெரியதாக இருந்தாலும், ராக்கெட் மூலம் செலுத்தப்படும்போது மடித்து பொருத்தப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் தினத்தில் செலுத்தப்பட்டதாலும், கரோனா பரவல் காரணமாகவும் பிரெஞ்ச் கயானாவில் உள்ள ஏவுதளத்தில் எதிா்பாா்த்ததைவிட குறைவான பாா்வையாளா்களே ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி செலுத்தப்படுவதைக் காண வந்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com