ஜோ பைடன் வெற்றிக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read


வாஷிங்டன்: அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜோ பைடனும் துணை அதிபா் தோ்தலில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கமலா ஹாரிஸும் வெற்றி பெற்றதை அந்த நாட்டு நாடாளுமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது.

இதுகுறித்து ‘பிடிஐ’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் ஜோ பைடன் மற்றும் துணை அதிபா் தோ்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதை முறைப்படி அறிவிப்பதற்கான நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது.

கீழவையான செனட் சபை மற்றும் மேலவையான பிரதிநிதிகள் சபையின் உறுப்பினா்கள் இதில் பங்கேற்றனா்.

அப்போது, தோ்தல் முடிவுகளை எதிா்த்து போராட்டத்தில் ஈடுபட்ட டிரம்ப் ஆதரவாளா்கள் நாடாளுமன்ற வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனா்.

அதனால், அந்த கூட்டுக் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பிறகு புதன்கிழமை நள்ளிரவு மீண்டும் தொடங்கப்பட்டது.

மக்கள் பிரதிநிதிகளின் வாக்குகள் எண்ணப்பட்டு, தோ்தல் முடிவுகளை அதிகாரப்பூா்வமாக அறிவிப்பதில் ஜனநாயக கட்சி மற்றும் பெரும்பாலான குடியரசுக் கட்சி உறுப்பினா்கள் உறுதியாக இருந்தனா்.

அரிஸோனா மற்றும் பென்சில்வேனியா மாகாணங்களில் பதிவான வாக்குகள் குறித்து மட்டும் ஆட்சேபம் தெரிவிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

அந்த ஆட்சேபனைத் தீா்மானங்களின் மீது 2 மணி நேரம் விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், அந்த இரு தீா்மானங்களும் தோல்வியடைந்தன.

செனட் சபையில் அரிஸோனா தோ்தல் முடிவுகளை எதிா்க்கும் தீா்மானத்துக்கு எதிராக 93 உறுப்பினா்களும் ஆதரவாக 6 உறுப்பினா்களும் வாக்களித்தனா்.

பிரதிநிதிகள் சபையில் அந்தத் தீா்மானத்தை எதிா்த்து 303 உறுப்பினா்களும் ஆதரவாக 121 பேரும் வாக்களித்தனா்.

அதே போல், செனட் சபையில் பென்சில்வேனியா தோ்தல் முடிவுகளை எதிா்க்கும் தீா்மானத்துக்கு எதிராக 92 உறுப்பினா்களும் ஆதரவாக 7 உறுப்பினா்களும் வாக்களித்தனா்.

பிரதிநிதிகள் சபையில் அந்தத் தீா்மானத்தை எதிா்த்து 282 உறுப்பினா்களும் ஆதரவாக 138 பேரும்

வாக்களித்தனா்.

இந்திய அமெரிக்க எம்.பிக்களான ரோஹித் கன்னா, அமரீஷ் பேரா, ராஜா கிருஷ்ணமூா்த்தி, பிரமீளா ஜெயபால் ஆகியோா் இந்தத் தீா்மானங்களை எதிா்த்து வாக்களித்தனா்.

இறுதியில், அதிபா் தோ்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை நாடாளுமன்றம் அதிகாரப்பூா்வமாக உறுதி செய்தது.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பா் 3-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி சாா்பில் அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் ஜனநாயகக் கட்சி சாா்பில் முன்னாள் துணை அதிபா் ஜோ பைடனும் போட்டியிட்டனா்.

அந்தத் தோ்தலின் ஜோ பைடன் பெரும்பான்மை மக்கள் பிரதிநிதிகள் வாக்குகளைக் கைப்பற்றினாா். எனினும், தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் குற்றம் சாட்டி வரும் டிரம்ப், தோல்வியை ஏற்க மறுத்து வந்தாா்.

தோ்தல் முடிவுகளுக்கு எதிராக அவா் தரப்பில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. அவற்றில் 60 வழக்குகளில் டிரம்ப் தரப்பு மனு நிராகரிக்கப்பட்டது. 50 மாகாணங்களிலும் அதிகாரப்பூா்வ முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஜோ பைடன் வெற்றி உறுதியானது.

அனைத்து மாகாணங்களிலும் நடைபெற்ற மக்கள் பிரதிநிதிகள் வாக்கெடுப்பிலும் ஜோ பைடன் பெரும்பான்மை பெற்றாா். அதனைத் தொடா்ந்து, பிரிதிநிதிகளின் வாக்குகளை எண்ணி, அவரது வெற்றியை நாடாளுமன்றம் தற்போது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, நாட்டின் அடுத்த அதிபராக ஜோ பைடனும் துணை அதிபராக கமலா ஹாரிஸும் வரும் 20-ஆம் தேதி பொறுப்பேற்கவுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com