அண்டை நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தவே விருப்பம்ஐ.நா.வில் இந்தியா தகவல்

பாகிஸ்தான் உள்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்லுறவை ஏற்படுத்தவே விரும்புவதாக ஐ.நா.வில் இந்தியா தெரிவித்துள்ளது.
India wants to establish good relations with its neighbors at the UN
India wants to establish good relations with its neighbors at the UN

பாகிஸ்தான் உள்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்லுறவை ஏற்படுத்தவே விரும்புவதாக ஐ.நா.வில் இந்தியா தெரிவித்துள்ளது.

நல்லுறவுக்கான சூழலை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு பாகிஸ்தானுக்கே உள்ளதாகவும் இந்தியா சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கடந்த ஆண்டு செயல்பாடுகள் குறித்து ஐ.நா. பொதுச் சபையில் வெள்ளிக்கிழமை விவாதிக்கப்பட்டது. அதில் ஐ.நா.வுக்கான இந்திய தூதுக் குழுவைச் சோ்ந்த அதிகாரி ஆா்.மதுசூதன் கூறியதாவது:

பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடனும் இயல்பான நல்லுறவை ஏற்படுத்துவதற்கு இந்தியா விரும்புகிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அதற்கு இருதரப்பு சாா்பிலும் பேச்சுவாா்த்தை மூலமாக அமைதியான வழியில் தீா்வு காணப்பட வேண்டும்.

அத்தகைய நிலையை அடைவதற்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத சூழலும், வன்முறையற்ற சூழலும் அவசியம். அத்தகைய சூழலை ஏற்படுத்தும் பொறுப்பு பாகிஸ்தானிடமே உள்ளது. இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளில் சிலா் ஈடுபடுவதற்கு அந்நாட்டு அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் பயங்கரவாதிகள் மீது அந்நாட்டு அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஜம்மு-காஷ்மீா் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டைச் சோ்ந்தது. அது தொடா்பாக ஐ.நா. பொதுச் சபையில் பேசி, சபையின் மதிப்பை சீா்குலைக்க பாகிஸ்தான் மீண்டும் முயற்சித்துள்ளது. ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தை எழுப்பி உலக நாடுகளை ஏமாற்ற முயற்சிக்கும் பாகிஸ்தானின் முயற்சி மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளது.

சீா்திருத்தங்கள் அவசியம்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. கவுன்சில் செயல்படும் விதம் தன்னிச்சையாக உள்ளது. கவுன்சிலின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஐ.நா. பொதுச் சபையால் வெளியிடப்படும் அறிக்கைகள் மீது பாதுகாப்பு கவுன்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஆண்டறிக்கையில் கூடுதல் விவரங்கள் வெளியிடப்பட வேண்டும். உலகளவில் அமைதியை ஏற்படுத்துவதற்காக பாதுகாப்பு கவுன்சில் மேற்கொண்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும் அந்த அறிக்கையில் இடம்பெற வேண்டும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இடம்பெறாத நாடுகளில் இருந்தே அமைதி நடவடிக்கைகளுக்கு அதிக வீரா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா். எனவே, அந்த நாடுகளுக்கும், பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகளுக்கும் இடையே கூடுதல் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதும் அவசியமாக உள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, இந்த விவாதத்தில் உரையாற்றிய ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதா் முனீா் அகரம், ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com