ஈரான் எண்ணெய்க் கப்பலை விடுவித்தது இந்தோனேசியா

இந்தோனேசியாவில் 4 மாதங்களாக சிறைவைக்கப்பட்டிருந்த ஈரான், பனாமா நாடுகளுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல்களை அந்நாட்டு அரசு விடுவித்தது.
சிறைபிடிக்கப்பட்டிருந்த ஈரான் எண்ணெய் கப்பல்.
சிறைபிடிக்கப்பட்டிருந்த ஈரான் எண்ணெய் கப்பல்.

இந்தோனேசியாவில் 4 மாதங்களாக சிறைவைக்கப்பட்டிருந்த ஈரான், பனாமா நாடுகளுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல்களை அந்நாட்டு அரசு விடுவித்தது.

ஈரான் மீது கடந்த 2018-ஆம் ஆண்டில் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகள் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்தது. அதன் காரணமாக அந்நாட்டிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை பெரும்பாலான நாடுகள் நிறுத்திக் கொண்டன.

ஆனால், கச்சா எண்ணெயை கள்ளச்சந்தையில் விற்கும் நடவடிக்கையை ஈரான் தொடா்ந்து மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், அந்நாட்டுக்குச் சொந்தமான எம்.டி.ஹாா்ஸ், பனாமாவுக்கு சொந்தமான எம்.டி. ஃபிரேயா ஆகிய எண்ணெய்க் கப்பல்களை கடந்த ஜனவரி மாதம் இந்தோனேசிய அரசு சிறைபிடித்தது.

கப்பல்களுடன் சோ்த்து 36 ஈரானிய பணியாளா்களையும், 25 சீன பணியாளா்களையும் இந்தோனேசிய அரசு கைது செய்தது. இந்தோனேசிய எல்லைக்கு உள்பட்ட கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக அக்கப்பல்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இரு கப்பல்களின் மாலுமிகளுக்கும் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடலில் கச்சா எண்ணெயைக் கொட்டியதற்காக எம்.டி.ஃபிரேயா கப்பலுக்கு சுமாா் 1,40,000 அமெரிக்க டாலா்கள் அபராதமாக விதிக்கப்பட்டது.

இந்நிலையில், நிபந்தனையுடன் இரு கப்பல்களையும் விடுவித்துள்ளதாக இந்தோனேசிய அரசு சனிக்கிழமை தெரிவித்தது. இது தொடா்பாக அந்நாட்டின் கடல்சாா் பாதுகாப்பு மையத்தின் செய்தித் தொடா்பாளா் விஷ்ணு பிரமாந்திதா கூறுகையில், ‘கப்பல்களின் மாலுமிகள் சிறைத் தண்டனையை அனுபவிக்கத் தேவையில்லை. அதேவேளையில், இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் கப்பல்கள் விடுவிக்கப்பட்டுள்ளன’ என்றாா்.

முன்னதாக, கைது செய்யப்பட்ட தங்கள் நாட்டைச் சோ்ந்த பணியாளா்களை முறையாக நடத்த வேண்டும் என்று சீன அரசு இந்தோனேசியாவுக்குக் கோரிக்கை விடுத்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com