ஜவுளித்துறைக்கு 10,000 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டம்: மத்திய அரசு

ஜவுளித்துறையில் 10,683 கோடி ரூபாய் மதிப்பில் உற்பத்தி சார்ந்த மானிய திட்டத்திற்கு மத்திய அரசு இன்று (புதன்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜவுளித்துறையில் உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் 10,683 கோடி ரூபாய் மதிப்பில் உற்பத்தி சார்ந்த மானிய திட்டத்திற்கு மத்திய அரசு இன்று (புதன்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் கூடுதலாக 7.5 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பல லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. 

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இத்தொகை பயன்படுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஜவுளி, எம்எம்எஃப் (மனிதனால் உருவாக்கப்பட்ட ஃபைபர்) ஆடைகள், எம்எம்எஃப் துணிகள், தொழில்நுட்ப ஜவுளி பொருட்கள் ஆகியவைக்கு திட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் அதிக மதிப்புள்ள எம்எம்எஃப் துணிகள், ஆடைகள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிகள் ஆகியவை உற்பத்தி செய்யப்படவுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில், உற்பத்தி சார்ந்த மானிய திட்டத்தினால் 19,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளோடு 3 லட்சம் கோடிக்கு மேல் விற்றுமுதல் கிடைக்கும் என அரசு கணித்துள்ளது.  

2021-22 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின்போது, 13 துறைகளுக்கு 1.97 லட்சம் கோடி மதிப்பில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாகவே தற்போது மானிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 13 துறைகளுக்கு அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தின் காரணமாக, அடுத்த ஐந்தாண்டுகளில் நாட்டின் குறைந்தபட்ச உற்பத்தியின் மதிப்பு 37.5 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாம் மற்றும் நான்காம் அடுக்கு நகரங்கள், நகர்ப்புற பகுதிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com